

திங்கள்கிழமை காலை நிஷாவுக்கு திருமணம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் திருக்கோளூர் எனூம் ஒரு சிறிய கிராமத்தில் திருமணம் முடிந்தது.
திருமணம் முடிந்த கையுடன் பட்டுப்புடவை, மணமாலையுடன் வெளியில் வந்த நிஷா கையில் சுருள் வாளை ஏந்தி சுற்றினார். சுற்றிநின்ற அனைவரும் சற்றே திகைத்துப் போகும் அளவும் சுருள் வாள் காற்றைப் பிளந்துகொண்டு சுழன்றது. அடுத்ததாக சிலம்பு சுற்றினார். அதிலும் வீரம் தெறித்தது.
இது குறித்து பி.நிஷா, "நான் எனது தாய்மாமன் ராஜ்குமார் மோசஸிடம் இந்தக் கலைகளைக் கற்றுக் கொண்டேன். அவரைத்தான் இப்போது திருமணம் செய்துகொண்டுள்ளேன் எனக்கு சிலம்பம், சுருள் வாள், அடிமுறை, களரிபயத்து போன்ற தற்காப்புக் கலைகள் தெரியும். நான் மூன்று வருடகங்களாகத்தான் இதைக் கற்றுக் கொண்டுள்ளேன். ஆனால், எனக்கு இந்தக் கலையைக் கற்றுக் கொண்டதால் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இளம் பெண்களுக்கு தற்காப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வீடியோவை திருமண நாளில் வெளியிட்டேன்" என்றார்.
நிஷாவின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூ, "தமிழகத்தைச் சேர்ந்த இந்த மணப்பெண் மேற்கொண்ட சிலம்பாட்டம் பார்த்து வியக்கிறேன். சமூக உருவாக்கிவைத்துள்ள சில கட்டமைப்புகளை மிக லாவகமாக உடைத்துவிட்டீர்கள். இவரைப் பார்த்து நிறைய இளம் பெண்கள் சிலம்பம் கற்றுக் கொள்ள வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
சுப்ரியா சாஹூ, தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலாளராகவும் நீலகிரி மாவட்ட கரோனா கண்காணிப்பு அலுவலராகவும் இருக்கிறார்.