

தமிழகத்தில் இனி மின் தடை இருக்காது என, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஜூன் 29) அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"முந்தைய கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்த மின் திட்டங்களை வேகப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மின் பராமரிப்புப் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் மிகப்பெரிய பணிகள் நடைபெறுகின்றன. மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இனி தமிழகத்தில் மின் தடை இருக்காது.
தமிழக அரசின் மீது குறிப்பாக மின் துறை மீது பூதக்கண்ணாடி அணிந்து, குற்றச்சாட்டு சொல்லலாம் என, சமூக வலைதளங்களில் பொதுவாக குற்றம் சொல்கின்றனர். எந்த இடங்களில் மின் தடை என குறிப்பிட்டு சொல்வதில்லை. குறிப்பிட்டு இடத்தை சொன்னால் மின் துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்.
மின்தடை குறித்து காஞ்சிபுரத்தில் எங்கோ, யாரோ பதிவிட்டதை, சென்னையில் உள்ள ஒருவர் மீண்டும் பதிவிட்டு தன் இருப்பைக் காட்டிக்கொள்ள நினைக்கின்றார். கடந்த ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளை சரிசெய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா அதிகமாக இருந்தபோது வீடு, வீடாக மின் கணக்கெடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதற்கு பதிலாக மூன்று வாய்ப்புகள் அரசின் சார்பில் கொடுக்கப்பட்டது. 2019 மே மாதத்திற்குண்டான கட்டணம் அல்லது நாம் செலுத்த வேண்டிய கட்டணத்திற்கான முந்தைய மாத கட்டணம், அல்லது செல்போனில் ரீடிங்கை புகைப்படம் எடுத்து அந்த தொகையை செலுத்துதல். இந்த மூன்று வாய்ப்புகளை அளித்தோம். அதனை பயன்படுத்தி ஏறக்குறைய 11 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
மின்வாரிய பணியாளர்கள் கணக்கெடுக்க செல்லும்போது ஒருவர் அல்லது இருவர் செய்யக்கூடிய தவறுகளால் அதிகப்படியான கட்டண புகார்கள் வருகின்றன. இந்த புகார்கள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்படுகின்றன. தவறு நிகழ்ந்தால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.