

புதுச்சேரி மாநில பாஜக செயற்குழு கூட்டம் இன்று (ஜூன் 26) நடைபெற்றது.
இதில் ஜான்குமார் எம்எல்ஏ பேசியதாவது, ‘‘இந்த கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு மனம் இருக்கமாக இருந்தது. ஆனால், நான் வந்தாக வேண்டும். வரவில்லை என்றால் 4 பேர் எதாவது பேசி விடுவார்கள்.
கட்சிக்கு எந்தவிதத்திலும் கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக கூட்டத்தில் கலந்து கொண்டேன். புதுச்சேரிக்கு நல்லது நடக்க வேண்டும். அது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் மட்டுமே முடியும். இதனை நன்றாக தெரிந்து கொண்டேன். நான் நாராயணசாமியுடன் இருந்து பார்க்கும்போது எந்த வேலையும் ஆகவில்லை. புதுச்சேரி 15 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டது. புதுச்சேரியை மேலே கொண்டுவர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தபோது நானும் வந்து இணைந்திருந்தால் என் மீது இன்னும் 2 வழக்குகள் வந்திருக்கும். அதனால் கடைசியாக வந்து கட்சியில் இணைந்தேன். கடந்த 2016 தேர்தலில் பாஜகவால் 10 ஆயிரம் வாக்குகள் கூட வாங்க முடியவில்லை.
இன்று நாம் அனைவரும் இணைந்து உழைத்ததால் 1.20 லட்சம் வாக்குகளை வாங்கி இருக்கிறோம். ஒரு காலத்தில் உங்களை (பாஜகவினர்) பார்க்கும்போது எதிரியாக தெரியும். ஆனால் இப்போது நண்பர்களாக இருக்கிறீர்கள். ஆரம்பத்தில் எனக்கு அமைச்சர் பதவி என்று கூறி, கார், அறைகளை ஒதுக்கினார்கள். கடைசி ஒரு நாளில் எல்லாம் மாறியதால் மனம் இருக்கமாக இருந்தது.
இதனால் டெல்லிக்கு சென்று மேலிட தலைவர்கள் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் எனக்கு வேண்டாதவர்கள் சில கசப்பான சம்பவங்களை செய்தார்கள். அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவில் இருந்து நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். மாநில கடனை அடைக்க அமைச்சர்கள் பாடுபட வேண்டும்.
ரூ.9 ஆயிரம் கோடி கடனில் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் கோடியை இந்த ஆட்சியில் அடைக்க முயற்சி செய்ய வேண்டும். அடுத்து நம்முடைய ஆட்சி வந்தவுடன் மீதியுள்ள ரூ.6 ஆயிரம் கோடியையும் அடைக்க வேண்டும். பிரதமர் மோடி நம்முடைய கடனை அடைக்க நிச்சயமாக உதவி செய்வார்.
வருகிற உள்ளாட்சி தேர்தலில் நல்ல வெற்றியை பெற அனைவரும் உழைக்க வேண்டும். மத்தியில் இருப்பவர்கள் மாநிலத்தில் வரவேண்டும் என்று மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். தற்போது தே.ஜ கூட்டணி அமைந்துள்ளது. அதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். பாஜகவுக்கு நான் முழு ஆதரவுடன் இருப்பேன்.’’ என்றார்.