

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபாலன், சமூக வலைதளங்களில் தலைவர்கள் குறித்து அவதூறு பரப்பிய கிஷோர் கே.சாமி ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜகோபாலன் (59). இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச தகவல்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து போக்ஸோ உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் கடந்த மே 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ராஜகோபாலனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இதேபோல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, மு.கருணாநிதி ஆகியோர் குறித்து இழிவான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவுசெய்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கிஷோர் கே.சாமியையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.