

தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசின் செயல்பாடு இருக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 22) வெளியிட்ட அறிக்கை:
"தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய தினம் ஆளுநர் உரையில் தமிழக அரசு பல்வேறு துறைகளில் மக்களுக்கான வருங்கால திட்டங்களை விளக்கி இருக்கிறது. அதனை அரசு ஒரு காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும்.
தற்பொழுது கரோனா தொற்றால் நாடும் நாட்டு மக்களும் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளனர். இந்த இழப்பை எப்படி சரிகட்டுவது, நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது எப்படி, மக்களின் வாழ்வாதாரத்தை காத்து அவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது என்று எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் தெளிவுப்படுத்தவில்லை.
கரோனா-வுக்கு பிறகு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை உறுதி செய்யும் வகையில் அரசின் செயல்பாடு இருக்க வேண்டும் என்று தமாகா வலியுறுத்துகிறது".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.