'இந்து தமிழ்' செய்தி எதிரொலி: கோவை ஊரகப் பகுதிகளில் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றப்பட்ட தடுப்பூசி முகாம்கள்

கோவை மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள டோக்கன் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள். |  படம்:ஜெ.மனோகரன்.
கோவை மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள டோக்கன் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள். | படம்:ஜெ.மனோகரன்.
Updated on
2 min read

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அரசுப் பள்ளிகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் மாற்றப்பட்டுள்ளன.

கோவையில் ஊரகப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது. இதில், பல ஆரம்ப சுகாதார நிலையங்கள் கரோனா சிகிச்சை மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. அங்கேயே பொதுமக்களுக்கான தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வந்தது. கரோனா நோயாளிகளும் அங்கு வருவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளி மைதானங்களைத் தடுப்பூசி செலுத்தும் மையங்களாக மாற்ற வேண்டும். அங்கு இடைவெளியுடன் மக்கள் நிற்கவோ, அமரவோ ஏற்பாடு செய்து டோக்கன் வரிசைப்படி அழைக்கலாம் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 5-ம் தேதி 'இந்து தமிழ்' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.

அதில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், “மாநகரைப் போல ஊரகப் பகுதிகளிலும் தடுப்பூசி முகாமைப் பள்ளிகளுக்கு மாற்ற சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

அதன்படி, ஊரகப் பகுதிகளில் நரசிம்மநாயக்கன்பாளையம், மதுக்கரை, காளம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்று (ஜூன் 19) தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்று மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் கூறுகையில், ''டோக்கன் பெற்றுக்கொண்ட அனைவரும் ஒரே நேரத்தில் காத்திருப்பதைத் தவிர்க்க, காலை 9 மணி முதல் 10 மணி, காலை 10 மணி முதல் 11 மணிக்கு வர வேண்டும் என நேரத்தைக் குறிப்பிட்டு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. இதேபோன்று ஊரகப் பகுதிகளில் மற்ற இடங்களில் உள்ள சமூகநலக் கூடங்கள், மண்டபங்கள், பள்ளிகளுக்கு முகாம்களை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

நேரத்தைக் குறிப்பிட்டு விநியோகிக்கப்பட்ட டோக்கன்.
நேரத்தைக் குறிப்பிட்டு விநியோகிக்கப்பட்ட டோக்கன்.

கோவை மாவட்டத்தில் சராசரியாக மாதந்தோறும் 1,400 பிரசவங்கள் நிகழ்கின்றன. அதன்படி, கடந்த ஜனவரி முதல் பிரசவித்தவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று மட்டும் மாவட்டம் முழுவதும் 1,390 கோவாக்சின் தடுப்பூசிகளும், 1,900 கோவிஷீல்டு தடுப்பூசிகளும் பாலூட்டும் தாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்டன. தடுப்பூசி செலுத்தும்போது அவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை அடிப்படையில் முதலில் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in