யோகா கலையைக் கற்றுக்கொண்டால் எந்த அலை வந்தாலும் சமாளிக்க முடியும்: புதுவை ஆளுநர் தமிழிசை  

யோகா கலையைக் கற்றுக்கொண்டால் எந்த அலை வந்தாலும் சமாளிக்க முடியும்: புதுவை ஆளுநர் தமிழிசை  
Updated on
2 min read

ஜூலை 1-ம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். யோகா கலையைக் கற்றுக்கொண்டால் எந்த அலை வந்தாலும் அதைச் சமாளிக்க முடியும் எனத் துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகள், 50 பிபாப் கருவிகளை அரசுக்கு வழங்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் இன்று (ஜூன் 19) நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் இந்த நிவாரணப் பொருட்கள் சுகாதாரத் துறைச் செயலர் அருணிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது ஆளுநரின் செயலர் அஜித் விஜய் சவுத்ரி, மாநில சுகாதார திட்ட இயக்குநர் ஸ்ரீராமலு ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘புதுச்சேரியைப் பொறுத்தவரை பொதுமக்களின் பங்களிப்பு மிகச் சிறப்பாக உள்ளது. அவர்கள் கொடுத்த உதவியால் அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பைச் சரிசெய்து வருகிறோம்.

கரோனா மூன்றாவது அலை வரக் கூடாது என்பதுதான் அனைவரின் எண்ணம். ஆனால், சிலர் 3-வது அலை குழந்தைகளைத் தாக்கும் எனக் கூறுகின்றனர். மேலும் சிலர் குழந்தைகளைத் தாக்காது என்கிறார்கள். எப்படி இருந்தாலும், 3-வது அலை எந்த வயதினரைத் தாக்கினாலும், அதை எதிர்கொள்வதற்கு அரசு தயாராக இருக்கிறது.

எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மூன்றாவது அலை என்னும் கொடூரமான சூழலை நாம் தவிர்க்க முடியும். அதற்காக சுகாதாரத்துறை பல திட்டங்களை அறிவித்திருக்கிறது. நமக்கு ஆரோக்கியம்தான் பரிசு. அதற்காக மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்கப்படுத்த பரிசு திட்டங்களையும் அறிவித்திருக்கிறார்கள்.

ஜூலை 1-ம் தேதி தேதிக்குள் அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தையும் அரசு அலுவலகங்களுக்குச் சொல்லி இருக்கிறோம். அதேபோல, விடுபட்ட முன்களப் பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்காகத் தடுப்பூசி திருவிழா 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகு உடல்நலக் குறைவு இருந்தால் உடனே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

கரோனாவில் இருந்து விடுபட்ட பிறகு, உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு இந்த யோகா மிகுந்த பலனைத் தருகிறது என்று சொல்கிறார்கள். இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எப்படி மருந்தைப் பயன்படுத்துகிறோமா, அதேபோல யோகாவையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய உடல், மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு யோகா உதவும். யோகா கலையைக் கற்றுக்கொண்டால் எந்த அலை வந்தாலும் அதைச் சமாளிக்க முடியும். பிரதமரும் முன்களப் பணியாளர்களுக்கான யோகா பயிற்சியைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

மக்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் கவனமாகச் செயல்பட்டு வருகின்றன. தளர்வுகளோடு கூடிய ஊரடங்கு மூலம் நாம் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி இருக்கிறோம். எந்த விதத்திலும் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது என்று நினைக்காமல், இன்றுவரை நாம் அபாயக் கட்டத்தில்தான் இருக்கிறோம் என்ற மனநிலையோடு அனைத்து எச்சரிக்கை நடைமுறைகளையும் பின்பற்றி அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

3-வது அலை நம்மை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி கொடுக்கப்படவில்லை. எனவே, வெளியே இருந்து வருபவர்களும், வீட்டில் இருப்பவர்களும் குழந்தைகளைக் கையாள்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.’’

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in