இரவு 9 மணி வரை உணவகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்: புதுச்சேரி முதல்வரிடம் உணவக உரிமையாளர்கள் வலியுறுத்தல்

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியைச் சந்தித்த காரைக்கால் உணவகங்களின் உரிமையாளர்கள் சங்கத்தினர்.
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியைச் சந்தித்த காரைக்கால் உணவகங்களின் உரிமையாளர்கள் சங்கத்தினர்.
Updated on
1 min read

இரவு 9 மணி வரை உணவகங்கள் செயல்பட புதுச்சேரி அரசு அனுமதிக்க வேண்டும் எனக் காரைக்கால் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வர் ரங்கசாமியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

காரைக்கால் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.பாலகிருஷ்ணன் தலைமையில் சங்க நிர்வாகிகள், புதுச்சேரியில் இன்று (ஜூன் 18) முதல்வர் என்.ரங்கசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை குறித்து எடுத்துக் கூறி, மனு அளித்தனர்.

அந்த மனுவில், ''கரோனா பரவல் காரணமாகக் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது மாலை 5 மணி வரை மட்டுமே உணவகங்கள் செயல்பட புதுச்சேரி அரசு அனுமதித்துள்ளது.

இதனால் உணவகங்கள் நடத்துவோர் மிகப்பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். கரோனா பரவல் சூழலால் கடந்த ஆண்டு தொடக்கம் முதல் வணிகர்கள் ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள்.

கரோனா ஊரடங்கு சூழலிலும் அரசுக்கான வரிகள், கடை வாடகை, ஊழியர்களுக்கான ஊதியம், வங்கிக் கடனுக்கான தவணை செலுத்துதல் போன்றவற்றை வணிகர்கள் தவறாது செய்து வருகின்றனர். இதனால் பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படுகிறது. இவற்றைக் களையும் வகையிலும், கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையிலும், வணிகர்களின் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும்போது, வரும் 21-ம் தேதி முதல் உணவகங்கள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதியளித்து அறிவிக்க வேண்டும்.

உணவகங்களில் அரசு அறிவிப்பின்படி தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாடிக்கையாளர்களை அனுமதிப்பது, சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in