தொற்று பாதித்தோருக்கு வீடுதேடிச் சென்று உதவும் செவிலியர்: கரோனா வார்டில் சேவையாற்ற காத்திருக்கும் மாற்றுத்திறனாளி

தனது பாட்டியுடன் செவிலியர் கீர்த்தனா.
தனது பாட்டியுடன் செவிலியர் கீர்த்தனா.
Updated on
1 min read

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா பாம்பன் நகரில் வசிப்பவர் கீர்த்தனா (24), தனியார் மருத்துவ மனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரிகிறார். இவர் பிறந்த சில நாட்களிலேயே தாய் மரணமடைந்தார். அவருக்கு பத்து வயதானபோது தந்தையும் உயிரிழந்தார். தாத்தா, பாட்டியிடம் வளர்ப்பில் கல்வி கற்றார்.

தனது உறவினர் உதவியுடன் திருப்பூர் அரசு நர்சிங் கல்லூரியில் படித்த அவருக்கு, மேலும் ஒரு சோகம் நடந்தது. கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது ஏற்பட்ட சிறு காயத்துக்கு உரிய சிகிச்சை அளிக்க பணமின்றி நாளடைவில் பாதிப்பு அதிகரித்து, அவரது இடது காலைத் துண்டிக்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் விடாமுயற்சியால் நர்சிங் படிப்பை முடித்தார் கீர்த்தனா. தனியார் மருத்துவமனை மருத்துவரின் உதவியால் செயற்கைக் கால் பொருத்தப்பட்டு, தற்போது அம்மருத்துவரின் மருத்துவ மனையிலேயே பணிபுரிந்தார்.

இதற்கிடையில், கரோனா கால கட்டத்தில் தொற்று பரவும் அச்சத் தில் பலர் இருக்கும் போது, தானாக முன்வந்து கரோனா நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கும் வீடு தேடிச் சென்று சேவை செய் கிறார் கீர்த்தனா. கரோனா நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்குவது, மனதளவில் உற்சாகப்படுத்துவது, உடல்நிலையைக் கண்காணிப்பது போன்ற உதவிகளைச் செய்கிறார். மாற்றுத் திறனாளியான இவரது சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அவர் கூறும் போது, ‘‘தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தாலும், அரசு மருத்துவ மனையில் கரோனா வார்டில் ஒப்பந்த செவிலியராக பணிபுரிய முயற்சித்தும் கிடைக்கவில்லை. ஏழ்மையில் வாழ்கிறேன். மாற்றுத் திறன் கொண்ட எனக்கு தமிழக அரசு உதவ வேண்டும்,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in