

புதிய அரசு அமைந்த ஒரு மாத காலத்துக்குள்ளாகவே குறை சொல்வது அரசியல் நாகரிகம் அல்ல என்று நாராயணசாமியை நமச்சிவாயம் விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட சோம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஜூன் 12) நடைபெற்றது. புதுச்சேரி பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவர் நமச்சவாயம் தொடங்கி வைத்தார். இதில் மருத்துவர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘பிரதமர் தடுப்பூசி போடுவதை தொடர்ந்து வலியறுத்தி வருகிறார். இதனால் பல்வேறு பகுதிகளிலும் கரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரியில் 16 முதல் 19-ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா அரசு நடத்த இருக்கிறது.
திருக்கனூர், காட்டேரிக்குப்பம், மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தடுப்பூசி போடுவதற்கான தீவிர நடவடிக்கையை அரசு முடுக்கிவிட்டுள்ளது. எனவே கரேனாவை விரட்ட வேண்டும் என்றால் ஒரே நிரந்தர தீர்வு தடுப்பூசியாக மட்டும் தான் இருக்க முடியும்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி கரோனாவை விரட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.மத்திய அரசு அனைத்து மாநிலத்துக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முன்னாள் முதல்வர் நாராயணசாமி தேர்தலால், மக்களால் புறக்கணிக்கப்பட்டவர். அவர் புதிய அரசை குறைச்சொல்வது அபத்தமானதாக உள்ளது.
சென்ற காங்கிரஸ் ஆட்சியில், தேர்தல் முடிவு வந்து 22 நாட்களுக்கு பிறகு தான் அரசாங்கம் பதவியேற்றது. ஆகவே தேவையின்றி எங்களது முதல்வரையும், அரசையும், பாஜக, என்.ஆர்.காங்கிரஸையும் குறை சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
முதல்வர் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. தற்போது கரோனா தொற்று குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது. இதெல்லாம் இந்த அரசால் எடுக்கப்பட்ட சீரிய முயற்சியாகும்.
எங்கள் கூட்டணியில் ஒருசில ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் ஏற்படும் போது சில காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம். முதல்வர் பதவியேற்ற உடனே அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், அமைச்சரவை அமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை இருந்தது. அவர் குணமடைந்து வந்தபிறகு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எல்லாம் நல்லமுறையில் நடக்கிறது.
வரும் 16-ம் தேதி கூட சபாநாயகர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அடுத்தவர்களை குறைசொல்வதற்கு முன்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது மனசாட்சியை தொட்டு பார்த்துக்கொள்ள வேண்டும். புதிய அரசு அமைந்த ஒரு மாதகாலத்துக்குள்ளாகவே குறை சொல்வது என்பது அரசியல் நாகரீகம் அல்ல. அமைச்சர்கள் பதவியேற்பு விழா குறித்து முதல்வர் அறிவிப்பார்.’’இவ்வாறு நமச்சிவாயம் தெரிவித்தார்.