

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸில் மது கடத்தியதாக 3 பேரைக் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து ரூ.77 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் உள்ள மதுபான மொத்த விற்பனைக் கடையிலிருந்து ஒரு வாகனத்தில் சிலர் அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு, தமிழகத்துக்கு கடத்திச் செல்ல முயல்வதாக போலீஸாருக்கு இன்று (ஜூன் 11) தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல், வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கம் பகுதியில் வில்லியனூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியே வந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மூவர், மதுபாட்டில்களைக் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் வந்த மூவரைப் பிடித்துக் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், திருச்சி தொட்டியம் வட்டம் மருதம்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் (36), வடலூர் இந்திரா நகர் கார்த்திக் (24), சென்னை கொரட்டூர் கம்மாளர் தெருவைச் சேர்ந்த சபரிராஜ் (27) ஆகியோர் என்பதும், இவர்கள் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு மது கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 20 பெட்டிகள் கொண்ட ரூ. 77 ஆயிரம் மதிப்புள்ள 192 குவாட்டர் பாட்டில்கள், ஆம்புலன்ஸ் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை போலீஸார் புதுச்சேரி கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.