Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

தாராபுரத்தில் சிமென்ட் லாரியில் ரூ. 40 லட்சம் பறிமுதல்: ஹவாலா பணமா என வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை

திருப்பூர்

சிமென்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை தாராபுரம் போலீஸார் பிடித்து விசாரித்ததில், ரூ.40 லட்சம்பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஹவாலா பணமா என்ற சந்தேகம் எழுந்ததால், கோவை வருமான வரித்துறையினர் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்- பொள்ளாச்சி சாலையில் பெஸ்ட் நகர் பகுதியில் தாராபுரம் போலீஸார் நேற்று முன் தினம் நள்ளிரவுவாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கர்நாடக மாநில பதிவெண் கொண்ட லாரி ஒன்று, கரூரில் இருந்து - கோழிக்கோடு மாவட்டத்துக்கு சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது அங்கிருந்த போலீஸார் லாரியை சோதனையிட்டனர். லாரியில் பின்பக்கம் சிமென்ட்மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சோதனையிட்டதில் ஓட்டுநரின் இருக்கைக்கு பின்புறம் 50 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மற்றும் கட்டு, கட்டாக பணம் இருப்பதை பார்த்தனர். மொத்தமாக ரூ.40 லட்சம் இருப்பதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக லாரி ஓட்டுநரான கோழிக்கோடு மாவட்டம் சாணக்கரையை சேர்ந்த ராகவன்(54) என்பவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது, ’தனக்கு தெரிந்தவரின் அண்ணன் மகன் ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதாகவும், அதற்காக கரூரில் ஒருவர் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு செல்வதாகக் கூறியுள்ளார்.’

இதில் சந்தேகம் அடைந்த போலீஸார், லாரி ஓட்டுநரை ரூ.40 லட்சம் பணத்துடன், தாராபுரம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். தொடர்ந்து கோவை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று பகல் முழுவதும் லாரி ஓட்டுநர் ராகவனிடம் கோவை வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். ரூ.40 லட்சம் ஹவாலா பணமா என்ற ரீதியிலும் தொடர்ந்து விசாரிக்கிறார்கள்.

இதில் தொடர்புடைய கரூர் மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த நபர்களை தாராபுரம் காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு வர போலீஸார் அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x