

புதுச்சேரியில் கரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்படி, மதுபானக் கடைகள் உட்பட அனைத்துக் கடைகளும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால், சுற்றுலாப் பிரிவு மதுபான பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. 42 நாட்களுக்குப் பிறகு கடந்த 8-ம் தேதி மதுபானக் கடை திறக்கப்பட்டதால், மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், மது கிடைக்காமல் சிரமப்பட்ட தமிழகப் பகுதியான விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் மது வாங்குவதற்காக புதுச்சேரிக்குப் படையெடுத்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபான வகைகளை வாகனங்களில் கடத்தி வரக்கூடும் என்பதால் அதனைத் தடுக்கும் வகையில் தமிழக எல்லைப் பகுதிகளில் வாகன சோதனையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, ‘‘புதுச்சேரி மாநிலத்தைத் தவிர அண்டை மாநிலமான தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்து புதுச்சேரிக்கு மதுப்பிரியர்கள் படையெடுத்து வருவதன் காரணமாக நாளை ஒருநாள் மட்டுமே மதுபானக் கடைகள் இயங்கும் என்றும், நாளை மறுநாளில் இருந்து மதுபானக் கடைகள் மூடப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வந்துவிட்டதால், புதுச்சேரியில் மதுபானக் கடைகள் மூடும் நிலை வந்துவிட்டது’’ என்று கலால்துறை அறிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று வேகமாகப் பரவியது.
இந்தத் தகவலால், தங்களுக்குத் தேவையான மதுபானங்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் நேற்று அலைமோதியது. இதனால் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கேள்விக்குறியாகின.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள புதுச்சேரி அரசு கலால் துறை துணை ஆணையர் சுதாகர், ‘‘புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவுகிறது. இதனை நம்ப வேண்டாம். மதுக்கடைகளை மூட கலால் துறை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை’’ எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்த விளக்கத்தால் மதுப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதனிடையே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, கலால்துறை தாசில்தார் பாலகிருஷ்ணன், புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ‘‘கலால்துறையின் பெயரைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட உள்ளது என்ற பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இது பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே பீதியை உருவாக்கியுள்ளது.
புதுச்சேரி கலால்துறை கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மதுக்கடைகளைத் திறக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆகவே இதுபோன்ற தவறான செய்திகள் மதுக்கடைகளில் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும். எனவே பொய்யான தகவலைப் பரப்பிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.