

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பொதுமக்களிடம் நுண்நிதி நிறுவனங்கள் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தக் கட்டாயப்படுத்தக் கூடாது, போதுமான கால அவகாசத்தை வழங்க வேண்டும் என, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நுண்நிதி நிறுவனங்கள் கரோனா ஊரடங்கு காலத்தில் மகளிர் குழுக்கள் மற்றும் பொதுமக்களிடம் கடன் வசூலிப்பதைச் சில வாரங்களுக்குத் தள்ளிவைக்கும் நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 09) நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்துப் பேசியதாவது:
"கரோனா 2-வது அலையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மாநிலம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பாதிக்காத வகையில், தமிழக அரசு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.
இந்நிலையில், மகளிர் சுய உதவிக் குழுக்கள், சுய தொழிலுக்காகப் பெற்றுள்ள கடன் தொகையைத் திரும்பச் செலுத்த வேண்டும் என, நுண் நிதி நிறுவனங்கள் (மைக்ரோ பைனான்ஸ்) தங்கள் களப் பணியாளர்கள் மூலம் கடன் தவணை செலுத்தும்படி கட்டாயப்படுத்தக் கூடாது.
பேரிடர் காலத்தில் வீடுகளுக்கே நேரில் சென்று கடன் தவணையை உடனே கட்ட வேண்டும் என யாரிடமும் நிர்பந்திக்கக் கூடாது. கரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் மென்மையான போக்கினைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.
2 அல்லது 3 வாரங்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தக் கூடாது. பொதுமக்கள் சிரமப்படுவதை நிதி நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும். பேரிடர்க் காலத்தில் பொதுமக்கள் மேலும் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்க அனைத்து நிதி நிறுவனங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்".
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, காணொலிக் காட்சி வாயிலாக ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் தாமோதரன், திருப்பத்தூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், உதவி திட்ட அலுவலர்கள், நுண்நிதி நிறுவனங்களின் பிரநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.