சென்னை அண்ணாசாலையில் செயல்படும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இடமாற்றம்?

சென்னை அண்ணாசாலையில் செயல்படும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இடமாற்றம்?
Updated on
1 min read

சென்னை அண்ணாசாலையில் செயல்படும் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் தலைமைச் செயலகத்தில் இடப் பற்றாக்குறை நிலவியதால், கடந்த திமுக ஆட்சியின்போது சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம்கட்டப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரும் புதிய தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் அடுத்து ஆட்சிக்குவந்த அதிமுக அரசு, புதிய தலைமைச் செயலகத்தை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றியது. இதையடுத்து, பழைய இடத்திலேயே தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே, சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்நிலையில், அண்ணாசாலையில் செயல்படும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை கிண்டிக்கு மாற்றிவிட்டு, இங்கு தலைமைச் செயலகம் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “அண்ணாசாலையில் செயல்படும் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், மருத்துவமனைக்கான கட்டமைப்புஇல்லை. இது ஒரு அலுவலகத்துக்கான கட்டமைப்பாகும். மற்ற அரசு மருத்துவமனைகளை விட மிகவும் குறைவான நோயாளிகளுக்கே இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனாலும் பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ.3.5 கோடி செலவாகிறது.

மருத்துவக் கட்டமைப்புடன் கிண்டியில் கட்டப்படும் கட்டிடத்துக்கு இந்த மருத்துவமனையை இடமாற்றம் செய்தால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக இருக்கும். தற்போதுள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மீண்டும் தலைமைச் செயலகமாக செயல்படுமா என்பது பற்றி தெரியவில்லை” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in