

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு இலக்கைவிட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது:
டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 3.24 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். நடப்பு குறுவை பருவத்தில் 3.50லட்சம் ஏக்கர் பரப்பில் நெல்சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு தேவையான குறுகிய கால நெல் ரக விதைகள், ரசாயன உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் போன்ற இடுபொருட்களை போதிய அளவு இருப்பில் வைக்கவும், நெல்நடவு இயந்திரங்களைக் கொண்டு, விரைவாக நடவுப் பணியை மேற்கொள்ளவும் வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடைமடைப் பகுதிகளுக்கும் பாசன நீர் விரைவில் சென்றடையும் வகையில், வாய்க்கால்களில் தூர் வாரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தற்போது 1,42,766 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,10,000 ஏக்கரில் நடவு மேற்கொள்ள வசதியாக 2,477 ஏக்கரில் நெல் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாற்றங்கால் விடும் பணி நடைபெற்று வருகிறது.
பாசன நீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் நோக்கத்தில், கடைமடைப் பகுதிகளில் நேரடி நெல் விதைப்புப் பணி மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, நிகழாண்டில் இலக்கை விஞ்சி கூடுதலான பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
தொடர்ந்து, தஞ்சாவூர் அருகேகளிமேடு கிராமத்தில் செம்மைநெல் சாகுபடி முறையில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர், திருவாரூர் நீடாமங்கலம் வட்டத்துக்குட்பட்ட ஆதனூர் மண்டபம் பகுதியில் சமுதாய நாற்றங்கால், பசுந்தாள் உர சாகுபடி ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார்.
மேட்டூர் அணையை முதல்வர் திறக்கிறார்?
மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டு டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜூன் 12-ம் தேதி மேட்டூர் வரும் முதல்வர் ஸ்டாலின், டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைக்க உள்ளதாகவும், சேலம் இரும்பாலை கரோனா சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட 500 கூடுதல் படுக்கை வசதியையும் முதல்வர் திறந்து வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று மேட்டூர் அணையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார்.