மழை முகங்கள்: வெள்ள மீட்புப் பணிகளில் போலீஸாரின் மகத்தான பங்களிப்பு

மழை முகங்கள்: வெள்ள மீட்புப் பணிகளில் போலீஸாரின் மகத்தான பங்களிப்பு
Updated on
1 min read

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 22 ஆயிரம் போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். டிசம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில் கூடுதல் ஆணையாளர்கள் நல்லசிவம், வரதராஜு ஆகியோர் தலைமையில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, வயர்லஸ் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் செய்யப்பட்டன.

வெள்ளம் கரைபுரண்டு ஓடிய அடையாறு, சைதாப்பேட்டை உட் பட பல பாலங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி யாரையும் செல்ல விடாமல் பல உயிரிழப்புகளை தடுத்தனர். போலீஸ் தடுப்பையும் மீறி சென்ற ஒரு சிலர் வெள்ளத்தில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.

வெள்ளம் வடியாத பல பகுதிகளில் தண்ணீரில் நின்று போலீஸார் போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர். கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் இன்னும் வடியாமல் தேங்கியுள்ளது. இதில் ஒரு இடத்தில் 5 அடி அளவுக்கு பள்ளமும் உள்ளது. வாகன ஓட்டிகள் இதில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக பாண்டிபஜார் போக்குவரத்து தலைமைக் காவலர் கோவிந்தன், தண்ணீர் நிரம்பிய அந்த பள்ளத்துக்குள் நின்று வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தார்.

‘தி இந்து’, வாசகர்களுடன் இணைந்து வழங்கும் நிவாரண பொருட்களை பாதுகாப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு கொண்டு செல்லும்போது பாதுகாப்பு கொடுப்பது என அனைத்து பணிகளையும் திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அனில்குமார் கிரி தலைமையிலான போலீஸார் சிறப்பாக செய்து வருகின்றனர். உதவி ஆணையாளர் பீர் முகமது மற்றும் காவலர்கள் தன்னார்வலர்களைப் போல செய்யும் பணிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

சட்டக் கல்லூரி மாணவர்கள்

‘தி இந்து’ வாசகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாகனங்களில் பொருட்களை கொண்டு சென்று விநியோகிக்கும்போது ரவுடிகள் மற்றும் பிற தொந்தரவுகளில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும் வகையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் நிவாரண வாகனங்களைச் சுற்றி நின்று பாதுகாப்பு வழங்குகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in