

'இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியாக, ஆம்பூரில் அதிக அளவிலான தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தோல் தொழிற்சாலை வாகனங்களுக்கு வருவாய்த் துறையினர் இன்று அபராதம் விதித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் தொழிலாளர்களைக் கொண்டு பெரிய தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும், ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களைத் தொழிற்சாலை நிறுவனம் தனி வாகனங்கள் மூலம் அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தி வருவதால், நோய்ப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பான செய்தி 'இந்து தமிழ் திசை' இணையதளத்தில் நேற்று (மே 31) வெளியானது. இதைத் தொடர்ந்து, ஆம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலை நிறுவனங்களில் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? வாகனங்களில் அதிக அளவிலான ஆட்கள் அழைத்துச் செல்லப்படுவது உண்மையா? என விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், வாணியம்பாடி ஆர்டிஓ காயத்ரி சுப்பிரமணி மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில், ஆர்டிஓ காயத்ரி சுப்பிரமணி மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், ஆம்பூர் புறவழிச்சாலையில் வருவாய்த் துறையினர் இன்று (ஜூன் 01) ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தனியார் தோல் தொழிற்சாலைக்குச் சொந்தமான வாகனங்கள் அந்த வழியாக வந்தபோது அவற்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், 5 தொழிற்சாலைகளுக்குச் சொந்தமான வாகனங்களில் அளவுக்கு அதிகமான தொழிலாளர்களை ஏற்றி வருவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 5 வாகனங்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என, வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.
அதன்பிறகு, ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் வருவாய்த் துறையினர் இன்று (ஜூன் 01) காலை ஆய்வு நடத்தினர். அங்கு கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? 100 சதவீதம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்களா? மொத்த தொழிலாளர்கள் எத்தனை பேர், தற்போது எத்தனை பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை வருகைப் பதிவேடு கொண்டு ஆய்வு செய்தனர். அதில், அரசு வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, ஆம்பூர் புறவழிச்சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கிளினிக் ஒன்றில் அதிக அளவில் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வந்த தகவலின் பேரில், வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் அங்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, 100-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல், இருமல், உடல் வலி எனப் பல்வேறு காரணங்களுக்காக மருத்துவ சிகிச்சை எடுக்க வந்ததும், அவர்கள் தனி மனித இடைவெளியைப் பின்பற்றாததால் மருத்துவமனை நிர்வாகத்துக்கு ரூ.5,000 அபராதம் விதித்த வருவாய்த் துறையினர் அங்கு சிகிச்சைக்காக வந்தவர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.