கருணாநிதி பிறந்த நாள்; வயது மூப்பு, உடல்நலிவுற்ற அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்க: முத்தரசன்

முத்தரசன்: கோப்புப்படம்
முத்தரசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

கருணாநிதி பிறந்த நாளில் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மே 31) வெளியிட்ட அறிக்கை:

"நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் சிறைவாசிகளின் எண்ணிக்கை அசாதாரணமாக அதிகரித்துள்ளது. அண்மையில் கிடைத்த தரவுகள்படி, ஒரு கோடியே 60 லட்சம் குற்றவியல் வழக்குகள் விசாரணையில் உள்ளன. இதில், 22 லட்சம் வழக்குகள் பத்தாண்டுகளைக் கடந்தும் விசாரணைக் கட்டத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன.

இந்த வகையில், மூன்று லட்சத்து 28 ஆயிரம் விசாரணை சிறைவாசிகளும், ஒரு லட்சத்து 42 ஆயிரம் தண்டனை பெற்ற சிறைவாசிகளும் கொட்டடிகளில் இருந்து வருகின்றனர்.

சிறைவாசிகளில் 90 சதவீதம் பேர் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள். அதில், 28 சதவீதம் பேர் எழுத, படிக்கத் தெரியதவர்கள். இவர்களில் கணிசமானோர், முஸ்லிம்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் என, சமூக அடக்குமுறைக்கு இலக்காகி வரும் பலவீனமானவர்கள் என்பது கருத்தில் கொள்ளத்தக்கது. இதில், 18 ஆயிரத்து 500 பெண் சிறைவாசிகள் என்பது கவலைக்குரியது.

தமிழ்நாட்டில் அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் நீங்கலாக 14 ஆயிரத்து 600 சிறைவாசிகள் இருக்கின்றனர்.

கடந்த 15 மாதங்களாக நீடித்து வரும் கரோனா நோய்த்தொற்றுப் பரவலும், அண்மையில் தொடங்கிய இரண்டாம் அலை பரவலும் சிறைவாசிகள் மத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனையொட்டி, சிறைவாசிகள் எண்ணிக்கையைக் குறைக்குமாறு உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் கருத்துகள் தெரிவித்துள்ளன.

இந்தச் சூழலில் நாட்டின் மூத்த அரசியல் தலைவர், சமுகநீதி ஜனநாயக இயக்கத்திற்குத் தலைமை ஏற்று வழிநடத்தியவர், மாநில உரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்கும் குரல் கொடுத்த கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் வரும் ஜூன் 3-ம் தேதி வருகிறது.

இந்தச் சிறப்புமிக்க நாளில், நீண்டகால விசாரணை சிறைவாசிகள், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளோர் மற்றும் தண்டனை பெற்று பத்தாண்டுகள் சிறைவாசம் முடித்தவர்கள், வயது மூப்பு மற்றும் உடல் நலிவுற்றோர் என, அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தமிழ்நாடு முதல்வரையும், அரசையும் கேட்டுக்கொள்கிறது".

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in