

கரோனாவால் மரணமடைந்தவர்கள் குடும்பத்துக்கு முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டுமென புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று (மே 29) வெளியிட்ட அறிக்கை:
‘‘தேசிய அளவில் சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் கரோனா இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. அதற்கு முறையான திட்டமிடுதல் இல்லாத சிகிச்சையே முதல் காரணமாகும்.
கரோனா தொற்று ஏற்பட்டவுடன் தொற்று நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு, உரிய ஆரம்பக்கட்ட சிகிச்சை அளிப்பதில் அரசு முழுமையாகத் தவறுவதும் ஒரு காரணமாகும். தற்போது கரோனா தொற்றை மையப்படுத்தி புதுச்சேரியில் உள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் ரூ.3 ஆயிரம் நிவாரண உதவியாக முதல்வர் அறிவித்துள்ளதை அதிமுக சார்பில் வரவேற்கிறோம்.
கடந்த காங்கிரஸ் - திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த நாராயணசாமி கரோனாவால் உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்குப் பிறகு ஓராண்டு காலம் முதல்வராக இருந்த நாராயணசாமி கரோனாவால் மரணம் அடைந்த குடும்பத்தினருக்கு ஒரு ரூபாய் கூட நிதியுதவி அளிக்கவில்லை. அதற்கான அரசாணையைக் கூட வெளியிடவில்லை.
முதல்வர் நிவாரண நிதியில் போதிய நிதியிருந்தும், அதிலிருந்தும் மரணம் அடைந்த குடும்பத்தினருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இந்நிலையில் தற்போது மரணம் அடைந்த குடும்பத்தினருக்கு அவரது அறிவிப்பைச் செயல்படுத்த வேண்டுமென அவரே கேட்பது வியப்பாக இருக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் இன்றுவரை சுமார் 1,500 நபர்கள் கரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவர் மரணம் அடைந்துள்ள சூழ்நிலையில் அந்தக் குடும்பமே இன்று வறுமையில் நிர்க்கதியாய் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது.
முதல்வர் மாநில அரசின் நிதி நிலைமைக்கேற்ப கரோனாவால் மரணம் அடைந்த குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். முதல்வர் தற்போது அனைத்துக் குடும்பத்தினருக்கும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பில் அரசுக்கு சுமார் ரூ.105 கோடி செலவு ஏற்படும்.
மரணம் அடைந்த குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் அளித்தால் அதற்காக சுமார் ரூ.7.5 கோடிதான் செலவு ஏற்படும். எனவே முதல்வர் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து மனிதாபிமான அடிப்படையில் கருணை உள்ளத்தோடு கரோனாவால் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.50 ஆயிரம் செலுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.’’
இவ்வாறு அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.