புதுச்சேரி மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் நோயாளிகளில் 95% பேர் தடுப்பூசி போடாதவர்கள்: சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்
புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் நோயாளிகளில் 95 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாதவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் கரோனா தொற்று 27.1.2020-ல் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 25.3.2020 அன்று முதல் கட்ட ஊரடங்கு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அந்நாள் முதல் கரோனா நோய்க்கு ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே என்று அனைத்து நாடுகளும் கரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டன. அதன் பயனாகக் குறுகிய காலத்தில் சாதனையாகப் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டிற்கு இந்திய அரசு முதலில் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 20.86 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் முதல் தவணை 16.45 கோடி நபர்களுக்கும், இரண்டாம் தவணை 4.4 கோடி நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இதுவரை 2,54,137 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் தவணை ஊசி எடுத்துக் கொண்டவர்கள் 12-16 வார இடைவெளியில் இரண்டாம் தவணை ஊசி எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு இரண்டு தவணைகள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் பொருட்டு கரோனா தொற்று எளிதில் ஏற்படாமலும், அவ்வாறு ஏற்பட்டால் கரோனா நோயின் வீரியம் குறைந்தும் காணப்படும். இந்தத் தடுப்பூசியின் இலக்கே கரோனா நோயால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்ப்பதே ஆகும்.
தற்போது புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டதன்படி வென்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் நோயாளிகளில் 95 சதவீத நோயாளிகள் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாதவர்களே. மீதமுள்ள நோயாளிகள் முதல் தவணை தடுப்பூசியை சமீபத்தில் எடுத்துக்கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மேலும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இடையே கரோனா நோய் தாக்கப்பட்டால் தீவிர பாதிப்பு ஏற்படாமலும், ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், வென்டிலேட்டர் உதவி தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக காணப்படுகிறது என்று சுகாதாரத்துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது என்று புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
