

மாநில அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் மற்றும்டொசிலிசுமப் அடங்கிய மருந்துகள்மீது வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார்.
சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மன்றத்தின் 43-வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில், புதிய அரசின் நிதியமைச்சர் என்ற பொறுப்பில் முதல்முறையாக பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
தற்போதைய நிலையில் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் விளிம்பு நிலை அல்லது எதிர்மறையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு 2021-22-ல் பாதுகாக்கப்பட்ட வருவாய் மற்றும் எதிர்பார்ப்பு வருவாய் இடையிலான இடைவெளியை மத்தியஅரசின் நிதியில் இருந்தோ, வெளிச்சந்தையில் கடன் ஏற்பாட்டின் மூலமோ மாநிலங்களுக்கு ஏற்படும்இழப்பீட்டை ஈடு செய்ய வேண்டும். மேலும், கரோனா பாதிப்பு அடிப்படையில் இழப்பீடு ஏற்பாட்டை ஜூலை மாதத்துக்கு பின்னும் நீட்டிக்க வேண்டும்.
தாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்குகளுக்கு விதிக்கப்படும் தாமத கட்டணத்தை குறைப்பது தொடர்பான சட்டக்குழுவின் பரிந்துரையை வரவேற்கிறோம். இருப்பினும், பெருந்தொற்றை கணக்கில் கொண்டு, இதை செயல்படுத்தும் காலத்தை ஆகஸ்ட் 31லிருந்து செப்.31 ஆக நீட்டிக்கலாம்.
மேலும், மாநில அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசிகள், ரெம்டெசிவிர், டொசிலிசுமப் அடங்கிய மருந்துகள் மீது வரிவிலக்கு அளிக்க வேண்டும். அத்தியாவசியமான பொருட்களுக்கு பூஜ்ய வரி விதிக்கமுடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக எழும் சிக்கலை உரியசட்ட வரைவுகள் மூலம் தீர்க்கலாம்.
வரிவிகித பரிசீலனைக் குழு பரிந்துரைகளை பொறுத்தவரை, எந்த ஒரு நபரும், மாநிலம் மற்றும்மத்திய அரசுகள் அல்லது லாபநோக்கு இல்லா மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக இறக்குமதி செய்யும் கரோனா பெருந்தொற்றுக்கான குறிப்பிட்ட பொருட்களின் மீதான தற்காலிக ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி விலக்கு மற்றும் மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டி, தயாரிப்பு கருவி, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மற்றும் கரோனா பரிசோதனை கருவிகள் ஆகியவற்றுக்கான வரி குறைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம்.
டை எத்தில் கார்பமைசின் மாத்திரைகளுக்கு வரி குறைப்பு, கப்பல் பழுதுபார்ப்புக்கு 18 லிருந்து 5 சதவீதமாக வரி குறைப்பு, சில பொருட்கள் சேவைகளுக்கு முன்மொழியப்பட்டுள்ள தெளிவுரைகள், அங்கன்வாடிகளுக்கு வரிவிலக்கு நீட்டிப்பு உள்ளிட்ட பரிந்துரைகளை நாங்கள் ஏற்கிறோம்.
மாற்றுத் திறனாளிகளின் உபகரணங்களுக்கு வரிவிலக்கு கோரியவிண்ணப்பத்தின் மீதான வரி கொள்கைக்கு பதில், பொது செலவினத்தில் இருந்து மானியமாக வழங்கும்பரிந்துரையையும் ஏற்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.