

தேனி மாவட்டம், கம்பம் அருகே தனியார் ஒயின் தொழிற்சாலையில் திராட்சை கொள்முதல் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சின்னமனூர், ஓடைப்பட்டி பகுதிகளில் பன்னீர் மற்றும் விதையில்லா பச்சை திராட்சை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சைக்கு ஏற்ற பருவநிலை நிலவு வதால் ஆண்டுக்கு மூன்று முறை மகசூல் கிடைக்கிறது. இங்கு விளையும் திராட்சைகள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் கரோனா பரவல் மற்றும் ஊரடங்கால் கடந்த ஆண்டில் இருந்து திராட்சைகளை சந்தைகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. கம்பம் அருகே ஆனைமலையான்பட்டியில் உள்ள தனியார் ஒயின் தொழிற்சாலையும் திராட்சை கொள்முதலை குறைத்துக் கொண்டது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு அதிகரித்தது.
இந்நிலையில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஒயின் ஆலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து திராட்சை கொள்முதல் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக ஆயிரம் டன் திராட்சை கொள்முதல் செய்ய உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் திராட்சை விவசாயிகள் ஏராளமான வாகனங்களில் திராட்சைகளை ஒயின் தொழிற்சாலைக்குக் கொண்டு வரத் தொடங்கியுள்ளனர்.
சந்தையில் நேரடியாக திராட்சை விற்பது பாதித்த நிலையில் தற்போதைய கொள்முதல் நடவடிக்கை விவசாயி களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.