பல்வேறு இடர்களைச் சந்திக்கும் கோவை மக்கள்; தடுப்பூசி தட்டுப்பாட்டைச் சரி செய்க- அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்ட அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள், எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ தலைமையில், மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜனைச் சந்தித்து இன்று மனு அளித்தனர்.
கோவை மாவட்ட அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள், எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ தலைமையில், மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜனைச் சந்தித்து இன்று மனு அளித்தனர்.
Updated on
1 min read

ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி தட்டுப்பாடு எனப் பல்வேறு இடர்ப்பாடுகளைக் கோவை மாவட்ட மக்கள் சந்திப்பதாகவும் தடுப்பூசித் தட்டுப்பாட்டைச் சரி செய்ய வேண்டும் என்று கோவை எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ள்னர்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி தலைமையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், பொள்ளாச்சி வி.ஜெயராமன், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், அமுல்கந்தசாமி மற்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று (27-ம் தேதி) வந்தனர். ஆட்சியர் எஸ்.நாகராஜனைச் சந்தித்து, கரோனா பரவல் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பான மனுவை அளித்தனர்.

தடுப்பூசித் தட்டுப்பாடு

அந்த மனுவில், ‘‘மாவட்டத்தில் கரோனா தொற்று 2-வது அலை வேகமாகப் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உயிரிழப்புகள், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வசதி கிடைக்காததது, அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கிடைக்காதது, ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி தட்டுப்பாடு எனப் பல்வேறு இடர்ப்பாடுகளைக் கோவை மாவட்ட மக்கள் சந்திக்கின்றனர். மருத்துவத் துறையினரும் இன்னல்களைச் சந்திக்கின்றனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும். ஆக்சிஜன் படுக்கை தொடர்பாகக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டாலும், உரிய பதில் இல்லை. ஆக்சிஜன் படுக்கை வசதிகள் குறித்த உண்மை நிலையைத் தெரிவிக்க வேண்டும்.

மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதோடு, அது எவ்வாறு பரவுகிறது என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாகனங்கள் மூலம் காய்கறிகள் தட்டுப்பாடு இன்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசித் தட்டுப்பாட்டைச் சரி செய்ய வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in