

‘ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா’ மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
‘ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா’ உலகில் மிகப்பெரிய அரசு மருத்துவக் காப்பீடு திட்டம் ஆகும்.
இத்திட்டம் 2018-ல் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியாவில் 50 கோடி பயனாளி களை இலக்காக கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய அரசு நிதியுதவி அளிக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் வரை, ஒரு வருடத்துக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் செலவுகளை உள்ளடக்கும்.
புதுச்சேரி அரசு 13.01.2021 அன்று இத்திட்டத்தின் கீழ் அனைத்து சிவப்பு அட்டைதாரர்களுக்கும் காப்பீடு அட்டை வழங்க அங்கீகரிக்கபட்டது. இதன் மூலம் முன்பு விடுபட்ட 83,000 குடும்பங்கள் பயன் அடைவார்கள்.
குறைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்
மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய கட்டணமில்லா 1800-425-7157 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இக்காப்பீடு திட்டம் புதுச்சேரியில் ஏழை மக்களுக்கான சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மஞ்சள் அட்டைதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக சிவப்பு நிற குடும்ப அட்டை (அசல்) மற்றும் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களைக் கொண்டு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு நிறுவனம், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி் நிறுவனம், ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனம், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, மாஹே அரசு பொது மருத்துவமனை, ஏனாம் அரசு பொது மருத்துவமனை, கரிக்கலாம்பாக்கம் சமுதாய சுகாதார மையம், மண்ணாடிப்பட்டு சமுதாய சுகாதார மையம், காரைக்கால் திருநள்ளார் சமுதாய சுகாதார மையம், மாஹே பல்லூர் சமுதாய சுகாதார மையம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் இம்மருத்துவமனைகளுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, மணக்குள விநாயகர்மருத்துவக் கல்லூரி, மகாத்மாகாந்தி மருத்துவக் கல்லூரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி, ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி, லட்சுமி நாராயண மருத்துவகல்லூரி, ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவக்மனை, தி பாஷ் மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை, புதுச்சேரி கேன்சர் டிரஸ்ட் மருத்துவமனை, கிட்னி சென்டர், புனித மேரி கண் மருத்துவமனை, பிம்ஸ், செந்தில் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, மாஹே கம்யூனிட்டி டயாலிசிஸ் சென்டர் ஆகிய மருத்துவமனைகளில்
‘ஆயுஷ்மான் பாரத் பிரதான்மந்திரி ஜன் ஆரோக்கியாயோஜனா’ அங்கீகரிக்கப்படு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கும், சாமானிய மக்களுக்கும் நல்ல தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும்.
இவ்வாறு சுகாதாரத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.