திருப்பத்தூர் மாவட்டத்தில் 208 கிராம ஊராட்சிகளில் நடமாடும் வாகனம் மூலம் காய்கறி விற்பனை: ஊராட்சிகளின் உதவி இயக்குநர் தகவல்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராமப்புறப் பகுதிகளில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வீடு தேடி வரும் என, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அருண் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று (மே 26) அவர் கூறியதாவது:

"திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்கள், 208 கிராம ஊராட்சிகள் உள்ளன. கரோனா பாதிப்பு நகர்ப்புறங்களைத் தொடர்ந்து, தற்போது, கிராமப் பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது. கிராம மக்களிடம் போதிய அளவு விழிப்புணர்வு இல்லாததது இதற்கு முக்கியக் காரணமாகும்.

இதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவின் பேரில், 208 ஊராட்சிகளிலும் தற்போது 'மாஸ் கிளீனிங்' நடைபெற்று வருகிறது. மேலும், வீடு வீடாகச் சென்று ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் காய்ச்சல், சளி, உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராமப்புறப் பகுதிகளில் அனைத்து ஊராட்சிகளிலும் காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று அறிகுறி லேசாக உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளவர்களை அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். தொழில், வேலை நிமித்தமாகக்கூட யாரும் வெளியே வரக்கூடாது என, ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இது தவிர, பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி, பால், பழம், உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வீடு தேடி வழங்க ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, கிராமப் பகுதி மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை கிராமங்கள்தோறும் வரும் நடமாடும் வாகனங்கள் மூலம் வாங்கிக்கொண்டு, யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தால் கரோனா எனும் பெரும் நோய்த்தொற்றை விரைவாக விரட்டியடிக்கலாம். அதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும்".

இவ்வாறு அருண் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in