

புதிய அரசு பதவியேற்றது மட்டுமின்றி மக்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்று நான் வேண்டுகிறேன் எனத் துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சமூகப் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு தனியார் நிறுவனங்கள், மருத்துவ நிவாரண உதவிகளை அரசுக்கு வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியத் தொழில் கூட்டமைப்பின் மூலம் லெனோவா நிறுவனம் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 150 பல்ஸ் ஆக்சிமீட்டர்களை சுகாதாரத்துறைக்கு இன்று (மே. 26) வழங்கியது.
இந்த மருத்துவ உபகரணங்கள், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் சுகாதாரத்துறைச் செயலர் அருணிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, புதுச்சேரி பல்கலைக்கழக சமூகப் பணித் துறையுடன் இணைந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொலைபேசி வழி ஆலோசனை வழங்குவதற்காகத் தொடங்கியுள்ள ‘பகிர்வோமா’ என்ற அமர்வுகளைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின்போது ஜவஹர் வித்யாலயா பள்ளியின் 5ஆம் வகுப்பு மாணவர் ஷ்யாம் பிரசன்னா தன்னுடைய சேமிப்புப் பணம் ரூ.2,773-ஐ உயிர் காற்று திட்டத்துக்கு நன்கொடையாக அளித்தார். மேலும், புதுச்சேரி இளைஞர் மற்றும் குழந்தைகள் தலைமைக்கான அமைப்பு இத்திட்டத்துக்கு ரூ.12 லட்சம் நன்கொடையாக வழங்கியது.
பின்னர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரி மக்களுக்குப் புதிய அரசு பதவியேற்றது மட்டுமின்றி மக்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்று நான் வேண்டுகிறேன். கரோனாவைப் பொறுத்தவரையில் தொடர்ந்து புதுச்சேரியில் பல நல்ல திட்டங்களை நாம் கொண்டு வருகிறோம். தற்போது ‘பகிர்வோமா’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 104 எண்ணை அழைத்து மனநல ஆலோசனை தேவையென்றால் அது கொடுக்கப்படுகிறது. மேலும், உடல் நலத்துக்கும், வாகனங்களுக்கும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளோம். அதற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
தற்போது கரோனா தொற்று கொஞ்சம் குறைய ஆரம்பித்துள்ளது. ஆனால் இது போதாது. கரோனா இல்லாத புதுச்சேரியாக மாற வேண்டும். பல தொண்டு நிறுவனங்கள் நிறைய உதவிகளைச் செய்து வருகின்றனர். ‘உயிர் காற்று’ என்ற திட்டம் நல்ல முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் நிறைய ஆக்சிஜன் படுக்கைகள் புதுச்சேரி மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. தயவுசெய்து அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள். இன்று கரையாம்புத்தூர் என்ற கிராமத்துக்குத் தடுப்பூசி போடச் சென்றோம். அங்கு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே மக்கள் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். பல தனியார் நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்கள் கொடுத்துள்ளனர். பொதுமக்களின் பங்களிப்பும் இருக்கிறது.
கரோனா நம்மோடுதான் இருக்கிறது. ஆகவே, கரோனா தற்காப்பு நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். கரோனா காலத்தில் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதாரம் வேண்டும் என்பதற்காக குடும்ப அட்டைக்கு ரூ.3,000 அறிவிக்கப்பட்டுள்ளது. அது அவர்களுக்குப் பலன் தரும் என்று நான் நம்புகிறேன்’’.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.