மதுரையில் சிறப்புக் குழு மூலம் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நம்பிக்கை

மதுரையில் சிறப்புக் குழு மூலம் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நம்பிக்கை
Updated on
1 min read

மதுரையில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர சிறப்பு வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் குறித்து அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் விசாகன், பரவை, மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிட்ட வர்த்தகர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறும்போது, ''வீடுகளுக்கே அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுசேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரே பையில் அனைத்து விதமான காய்கறிகளையும் வழங்க உள்ளோம். கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மதுரையில் ஒரு சிறப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், ஆட்சியர், ஆணையர், மருத்துவ வல்லுநர்களைக் கொண்டு இந்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு வல்லுநர் குழு அடிக்கடி இணையம் வழியாகக் கூடி விவாதிக்கும்.

மத்திய அரசு தமிழகத்திற்குத் தடுப்பூசி வழங்காததால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடவில்லை. குஜராத்தில் 100 பேரில் 16 பேருக்குத் தடுப்பூசி வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு 100க்கு 6 பேருக்கு மட்டுமே தடுப்பூசியை மத்திய அரசு வழங்குகிறது. மாநிலங்கள் தடுப்பூசியைக் கொள்முதல் செய்யக் கூடாது என மத்திய அரசு சொன்னது. தற்போது தடுப்பூசியைக் கொள்முதல் செய்யலாம் எனச் சொல்கிறது. தமிழகம் இக்கட்டான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. நிதி ஆதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

அமைச்சர் மூர்த்தி கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் தொற்றுப் பரவலைத் தடுக்க ஊராட்சி, ஒன்றிய, வட்டார அளவில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். இந்த நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கும். தொற்றைக் குறைக்க யார் ஆலோசனை சொன்னாலும் செயல்படுத்துவோம். மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களிடம் கரோனா அச்சம் இல்லை'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in