

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 2,674 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 433 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இந்த முழு ஊரடங்கைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் சாலைகளில் இருச்சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வழக்கம் போல் சுற்றித் திரிந்தனர்.
காவல் துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பியும் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சாலைகளில் வாகனங்களில் சுற்றித் திரிவோர் மீது வழக்குகள் பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை காவல் துறையினர் கடந்த 2 நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகரில் 20 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 65 இடங்களில் போலீஸார் சோதனை சாவடிகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாநகர எல்லை மற்றும் மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இ-பதிவு மற்றும் இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். காவல் துறையினரின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சாலைகளில் வாகனங்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் காவல் துறையினரின் வாகன தணிக்கை பணிகளை எஸ்பி எஸ்.ஜெயக்குமார் இன்று விவிடி சந்திப்பு மற்றும் எப்சிஐ ரவுண்டானா பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேவையில்லாமல் இருச்சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்தவர்களை வழிமறித்து விசாரித்து அறிவுரைகள் வழங்கிஅனுப்பி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கண்காணிப்பு பணியில் 2000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை தேவையில்லாமல் வெளியே வந்தவர்கள் 2,674 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 412 இரு சக்கர வாகனங்களும், 20 ஆட்டோக்களும் மற்றும ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் மீது வழக்குப் போடுவதோ, வாகனங்களை பறிமுதல் செய்வதோ காவல் துறையின் நோக்கமில்லை. கரோனா வைரஸை ஒழிக்க வேண்டும். பொதுமக்களை அதன் தாக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதுதான் காவல் துறையினர் நோக்கம்.
எனவே பொதுமக்கள் தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள்.அடுத்தவர்களிடம் பேசும்போது முடிந்தவரை 2 முகக்கவசம் அணியுங்கள். எந்த நேரத்தில் வெளியில் சென்றாலும் 6 அடி இடைவெளி கடைபிடியுங்கள். தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். கைகளை அவ்வப்போது கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்யுங்கள். நீங்கள் இதில் அலட்சியமாக இருக்க வேண்டாம். பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இந்த வைரஸை அழிக்க முடியும் என்பதை மனதில் கொண்டு செயலாற்றுங்கள் என்றார் எஸ்பி. அப்போது ஏடிஎஸ்பிக்கள் கோபி, கார்த்திகேயன், தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் காவல் துறையினர் சார்பில் முகக்கவசம் அணியாத 783 பேரிடம் ரூ.1,56,600-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 19 பேரிடம் ரூ.9,500-ம் என மொத்தம் ரூ.1,66,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.