

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு காணொலி காட்சி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. நேற்று (மே 20) மட்டும் தமிழகம் முழுவதும் 35,579 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 6,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று தமிழகம் முழுவதும் 397 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 19,131 ஆக அதிகரித்துள்ளது.
தினசரி தொற்று எண்ணிக்கையில் சென்னை தொடர்ந்து முதலிடம் வகித்துவருகிறது. சென்னை தவிர்த்து, அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தொற்று பரவல் அதிகமாக உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, நீலகிரி, தூத்துக்குடி, தேனி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் இன்று (மே 21) தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு சென்னை, தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதில், கடந்த 10 நாட்களில் தொற்றுப் பரவல் விகிதம், மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளிட்ட பிற மருத்துவ தேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.