மதுரை தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க, தமிழக அரசு வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்படுவோருக்கான ஆக்சிஜன் படுக்கை வசதி பற்றாக்குறையை போக்கவும், விரைவில் கரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி, ஆக்சிஜன் படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மதுரை அருகிலுள்ள தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (மே 21) மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தோப்பூர் ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையத்தை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக, ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின், காலை 10.50 மணிக்கு கார் மூலம் முதல்வர் தோப்பூருக்கு சென்றார். அவருக்கு அந்த சிகிச்சை மையம் குறித்து அதிகாரிகளால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அவர் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். பின்னர், சிகிச்சை மையம் முழுவதையும் சுற்றி பார்த்த முதல்வர், அங்குள்ள சிகிச்சை வசதிகள் குறித்தும் அமைச்சர்கள், ஆட்சியர் அனிஷ்சேகர், மருத்துவர்கள், செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.

முதல்கட்டமாக, 230 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே உடனடியாக செயல்பாட்டு வந்தது என்றும், எஞ்சிய படுக்கைகள் ஓரிரு நாளில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், பெரியகருப்பன், பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், எம்.பி-க்கள் கனிமொழி, வெங்கடேசன், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, வெங்கடேசன், பூமிநாதன் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், அவரது மகன் ஹரி தியாகராசன், தென்மண்டல காவல்துறை ஐஜி அன்பு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, முதல்வர் கார் மூலம் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். முதல்வரின் வருகையையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in