இணையதள முன்பதிவு முறையை கைவிட்டு ஆதார் கார்டு நகல் எடுத்து வரும் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்: புதுச்சேரி திமுக வலியுறுத்தல்

இணையதள முன்பதிவு முறையை கைவிட்டு ஆதார் கார்டு நகல் எடுத்து வரும் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்: புதுச்சேரி திமுக வலியுறுத்தல்
Updated on
2 min read

இணையதள முன்பதிவு முறையை கைவிட்டு ஆதார் கார்டு நகல் எடுத்து வரும் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டுமென திமுக புதுச்சேரி சட்டப்பேரவை கட்சி தலைவர் சிவா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (மே. 21)வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த ஜனவரி 14-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 31 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால் தற்பொழுது அவர்களுடைய ஆர்வம் குறைந்து இருக்கிறது. சில மையங்களில் விரல் விட்டு எண்ண கூடிய அளவில் தான் தடுப்பூசி போட மக்கள் வருகிறார்கள். இதற்கென்ன காரணம் என்பதை அரசு அறிய வேண்டும்.

மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து மக்களிடம் அரசு உரிய முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதேவேளையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.

புதுச்சேரியில் கதிர்காமம் அரசு மருத்துவமனை, கோரிமேட்டில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனை, பல் மருத்துவமனை மற்றும் காசநோய் மருத்துவமனை ஆகிய மையங்களில் போடப்படுகிறது. முன்புபோல் ஒரே பகுதியிலோ, தொகுதியிலோ அரசின் நலத்திட்டங்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் குறிப்பிட்ட ஒரே பகுதியில் அதுவும் நகரப்பகுதியில் மட்டுமே இந்த மையங்கள் வைத்திருப்பதனால் கிராமப்புற மக்களும் தொலைதூர பகுதி மக்களும் வந்து எப்படி தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்? கரோனா ஊரடங்கை மீறி இவர்கள் எப்படி பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து நகரத்தின் குறிப்பிட்ட 4 மையங்களுக்கு வர முடியும்.?

கரோனா தொற்று இரண்டாம் அலையில் இளம் வயதினரும் அதிகமாக இறக்கின்றனர். அவர்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தற்போது கரோனாவால் இளைஞர்கள் உயிரிழப்பு அதிகரிக்கும் சூழ்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் முகாமை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொண்டுவர வேண்டும்.

ஏற்கெனவே 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடப்படும் மையங்களிலேயே இவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை கொண்டு வர வேண்டும். ஒரு மையத்தில் வெகு சிலரே வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுகிறார்கள். அதனால் பல தடுப்பூசிகள் வீணாகி வருவதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதனால் இளைஞர்களுக்கும் அதே மையங்களில் தடுப்பூசி போடுவதற்கு அரசு ஏற்பாடு செய்தால் அதிக அளவில் மக்கள் சிரமமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். இதற்கு போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் உள்ள நிலையில் தற்போதுள்ள அனைத்து தடுப்பூசி மையங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போட்டால் வீணாவதை தடுக்க முடியும்.

மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. பொது சேவை மையங்கள் உள்ளிட்ட அனைத்து இணையதள மையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் எப்படி மக்கள் முன்பதிவு செய்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வர முடியும். எனவே இம்முறையை கைவிட்டு ஆதார் கார்டு நகல் எடுத்து வருபவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்.’’இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in