

கரோனா நோயாளிகளுக்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் அபகரித்ததாக காவல் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (23), சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றினார்.
இந்நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்தபோது, இவர் பலமுறை வரிசையில் நின்று, போலி ஆவணங்கள் மூலம் மருந்து வாங்கியுள்ளார். பின்னர், அறுவை சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மற்றொரு தற்காலிக ஊழியருடன் சேர்ந்து, கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை அதிக லாபத்துக்கு விற்பனை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸார், ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக பாலகிருஷ்ணன், அவரது கூட்டாளிகள் பழைய வண்ணாரப்பேட்டை முகமது கலில் (35), முகமது ஜாவித் (23), புரசைவாக்கம் முகமது இர்பான் (34), திருவல்லிக்கேணி ஆரிப் உசேன் (23) ஆகிய 5 பேரை கடந்த 17-ம் தேதி கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள், ரூ.35 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்த பணத்தை போலீஸார் கையாடல் செய்ததாகவும், அவர்களின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி முறைகேடாக ரூ.1 லட்சம் வரை பணம் எடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தனிப்படையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சுதாகர், தலைமைக் காவலர் சரவணகுமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து காவல் இணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.