

கட்சிக்குள் கமலுக்கு வழிகாட்டுபவர்கள் எடுத்த தவறான முடிவாலும், கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் எடுத்த முடிவாலும் கட்சியின் மீதான நம்பிக்கை மக்களிடையே போய்விட்டது. திமுக, அதிமுகவுக்கு பெரிய மாற்றாக கமல் இருப்பார் என நம்பினேன். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை என சி.கே.குமரவேல் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கியத் தலைவர்கள் விலகி வரும் நிலையில் இன்று கட்சியின் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேலும் விலகினார். தனது விலகல் குறித்து கமல்ஹாசனுக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளார்.
விலகலுக்குக் காரணம் என்னவென்று அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
“தேர்தல் நேரத்தில் நடந்த குளறுபடிகள், தொடர்ந்து கட்சியிலிருந்து விலகுவதற்கான காரணம் குறித்துச் சொல்லிவிட்டோம். ஒரு தொகுதியில் வென்றால் போதும் என்கிற மனப்பான்மையில் தலைமை இருந்தது. தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எதையும் செய்ய முடியவில்லை. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கமல்ஹாசன் பெரிதாக ஏதேனும் செய்வார் என எதிர்பார்த்தோம். அதை அவர் செய்யவில்லை.
பிரச்சார அலுவலகம், நடைமுறை மாறிப்போய் விட்டது. மார்ச் மாதத்துக்குப் பின் கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் உள்ளே புகுந்து முடிவெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தேர்தல் நேரத்தில் எதுவும் சொல்லக்கூடாது என்கிற எண்ணத்தில் மவுனமாகச் செயல்பட்டோம்.
ஆனால், அதன் பின்னரும் மாறவில்லை. தேர்தல் தோல்விக்குப் பின் கட்சித் தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்து தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விளக்கி ஆலோசனைக் கூட்டம் நடத்தக் கேட்டுக்கொண்டேன். ஆனால், அவர் எதையும் செய்யவில்லை.
2019இல் நான் கட்சியிலிருந்து விலகியபோது மூன்றாம் கட்ட அளவில் இருந்தேன். அப்போது கமலுடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நிர்வாகிகள்தான் தவறு செய்கிறார்கள் எனக் குற்றம் சாட்டியிருந்தேன். ஆனால், இரண்டாம் முறை இணைந்தபோது நான் முதல் கட்ட அளவில் இருந்து பார்த்தபோது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கமல்ஹாசனே காரணம் என்று தெரிந்தது. அனைத்து முடிவுகளுக்கும் அவரே காரணம் என்று தெரிந்ததால் இனியும் நீடிப்பதில் பயனில்லை என்பதால் விலகுகிறேன்”.
இவ்வாறு சி.கே.குமரவேல் தெரிவித்தார்.
விலகல் குறித்து கமல்ஹாசனுக்கு சி.கே.குமரவேல் எழுதிய பகிரங்க கடிதம்:
”2019ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிப் போனாலும் தமிழகத்தில் உங்களாலும், மக்கள் நீதி மய்யத்தாலும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையில்தான் நான் மீண்டும் இணைந்தேன். மக்களிடத்திலும் அந்த மாற்றத்திற்கான எதிர்பார்ப்பும் மிக அதிகமாக இருந்தது.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் கட்சியின் நடவடிக்கைகளாலும், உங்களுடைய சூறாவளி சுற்றுப்பயணத்தாலும் மக்களிடையே மய்யத்தின் மீதான வரவேற்பும், நம்பிக்கையும் அதிகரித்ததை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அதைத் தொடர்ந்து டார்ச் லைட் சின்னம் கிடைத்தபோதும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்த போதும், மக்கள் நீதி மய்யத்தின் மீதான அந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மேலும் பிரகாசமானது.
ஆனால், இன்று நமக்கான வாய்ப்புகளை நாம் இழந்துவிட்டோம். எதிர்க்கட்சியில் அமர வேண்டிய அத்தனை தகுதிகளும் நமக்கு இருந்தபோதும் ஒரு தொகுதியில் கூட நம்மால் வெற்றி பெற முடியவில்லையே. ஏன்? உங்களுடைய அரசியல் ஆலோசகர்களும், அவர்களுடைய தவறான வழிநடத்தலும்தான் காரணம்.
ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் போதும் என்கிற இவர்களுடைய குறுகிய நோக்கமும், செயல்பாடுகளும்தான் மக்களிடையே இருந்த நம் மீதான நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் தகர்த்துவிட்டது. நமது தோல்விக்கான காரணங்களையும், காரணிகளையும் இதற்கு முன் விலகிய பொறுப்பாளர்கள் உங்கள் முன் வைத்துவிட்டார்கள்.
அவர்கள் முன்வைத்த காரணங்களில் உண்மை இல்லாமல் இல்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். புதிதாக நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. வரலாறு படைப்பவர்களாக இருக்க வேண்டிய நாம் வரலாறு படிப்பவர்கள் ஆக மாறிவிட்டோம் என்கிற கோபமும் ஆதங்கமும் எனக்கு நிறைய உண்டு.
தனிமனித பிம்பத்தை மட்டுமே சார்ந்திருக்கும் அரசியலை விடவும் மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் பாதையில் பயணிக்க விரும்புகிறேன். ஆகவே, மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து உடனடியாக விலகுகிறேன். உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் வாழ்த்துகள்”.
இவ்வாறு சி.கே.குமரவேல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.