

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ‘ரெம்டெசிவிர்’ மருந்து, திருத்தணி அருகேகள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக மாநில குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி. சாந்திக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, டிஎஸ்பி ஜான்சுந்தர் தலைமையில், இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் இரவு திருத்தணி அருகேயுள்ள கன்னிகாபுரம் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள அருள்விநாயகர் கோயில் அருகே,சந்தேகத்துக்கு இடமானவகையில் நின்றுகொண்டிருந்த முதியவரை போலீஸார் சோதனை செய்தனர். அவர் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் விசாரித்ததில், அவர் கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(64) என்பதும், சமீபத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட தன் உறவினருக்காக சென்னையில் 6 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை வாங்கி, அதில் 3 குப்பிகளை மட்டும் பயன்படுத்திய நிலையில், உறவினர் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மீதமுள்ள 3 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை தலா ரூ.25 ஆயிரத்துக்கு கள்ளச்சந்தையில் விற்க முயன்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருத்தணி போலீஸார் ராஜேந்திரனை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 3 மருந்துக் குப்பிகளை பறிமுதல் செய்தனர்.