

முதல்வரான பிறகு முதன்முறையாக மதுரைக்கு மு.க.ஸ்டாலின் வரவிருப்பதை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்தப் பயணத்தின்போது அவர் தனது சகோதரர் மு.க.அழகிரியை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து, மே 7ம் தேதி திமுக.தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார்.
அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். கரோனா 2வது அலையைக் கட்டுப்டுத்தும் வகையில், பிற பணிகளை காட்டிலும் நோய்த் தடுப்புக்கு முக்கியத்துவம் அளித்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை தவிர, பிற மாவட்டங்களிலும் கரோனா தடுப்புப் பணிகளை குறித்து ஆய்வு செய்து, உரிய ஆலோசனைகளை அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் வழங்குவதற்காக பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.
இதன்படி, நாளை (மே20) கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கரோனா தடுப்பு விவரங்களைக் கேட்டறியும் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.
இதைத்தொடர்ந்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மே21ம் தேதி நடக்கும் கரோனா தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர், மதுரை தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை விரிவாக்கப் பணியை நேரில் பார்த்து ஆய்வு செய்கிறார்.
இதற்காக அவர் கோவையில் இருந்து விமானம் மூலம் நாளை இரவு 8 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். 8.30 மணிக்கு அழகர்கோயில் சாலையிலுள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்து தங்குகிறார்.
முன்னதாக அவரை அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராசன், ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள், திமுக முக்கிய நிர்வாகிகள் வரவேற்க உள்ளனர்.
21ம் தேதி 9.45 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் காலை 10 மணிக்கு பங்கேற்கிறார்.
பின்னர் 11 மணிக்கு தோப்பூர் செல்கிறார். அங்கு ஆய்வுப் பணியை முடித்துவிட்டு, 11.30மணிக்கு மேல் அவர் கார் மூலம் திருச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
முதல்வரான பின்னர் முதன்முறையாக முக. ஸ்டாலின் மதுரை வருகையொட்டி தென்மண்டல ஐஜி டி.எஸ்.அன்பு, மாநகரக் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, எஸ்பி சுஜித்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா தடுப்புக்கான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க முன்கூட்டியே வந்து மதுரையில் தங்கும் முதல்வர், மதுரை டிவிஎஸ் நகரிலுள்ள தனது சகோதரர் மு.க.அழகிரியை சந்திக்க அதிக வாய்ப்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘ தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு தனது சகோதரரான மு.க.அழகிரிக்கும் ஸ்டாலின் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.
கரோனா போன்ற சூழல் அவர் வீட்டில் இருந்ததால், அவரது மகள், மகனை விழாவில் பங்கேற்க செய்தார். இதற்கிடையில், திமுக வெற்றிக்கும் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இச்சூழலில் முதல்வராகப் பதவியேற்ற பின், மு.க.ஸ்டாலின் முதன்முறையாக மதுரைக்கு வரும் நிலையில், அவர் தனது சகோதரரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
ஒருவேளை முதல்வர் டிவிஎஸ் நகருக்கு செல்லும் பட்சத்தில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். இதையொட்டி டிஜிபி அல்லது கூடுதல் டிஜிபி இன்று மதுரை வர உள்ளனர்,’’ என்றனர்.