கடலூர் மாவட்டத்தில் பொது முடக்கத்தால் நெல் கொள்முதல் நிறுத்தம்: திட்டக்குடி பகுதி விவசாயிகள் கவலை

திட்டக்குடி அருகே அரிகேரி கிராமத்தில் பிளாஸ்டிக் விரிப்புகளால் மூடப்பட்டிருக்கும் நெற் குவியல்கள்.
திட்டக்குடி அருகே அரிகேரி கிராமத்தில் பிளாஸ்டிக் விரிப்புகளால் மூடப்பட்டிருக்கும் நெற் குவியல்கள்.
Updated on
1 min read

பொது முடக்கத்தின் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் அறுவடை செய்த நெல் மூட்டை மூட்டையாக திறந்தவெளியில் வைக்கப்பட்டு, பிளாஸ்டிக் விரிப்புகளால் மூடப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. சம்பா பருவம் முடிந்த நிலையில் விவசாயிகளில் ஒருபிரிவினர் ஏரிப் பாசனத்தின் மூலம் 20 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளனர்.

அவ்வாறு பயிரிடப்பட்ட நெல் தற்போது அறுவடை முடிந்திருக்கும் சூழலில், அவற்றை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், அவற்றை திறந்தவெளியில் பிளாஸ்டிக் விரிப்புகளில் மூடி வைத்திருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் பெரும்நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரிகேரி கிராமத்தினர் வெலிங்டன் நீர்த் தேக்கத்திலிருந்து வெளியேறும் தண்ணீரைக் கொண்டு பாசன வசதி பெற்று வருகின்றனர். தாமதாக திறக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு நெல் பயிரிட்ட விவசாயிகள், தற்போது அறுவடையை முடித்துள்ளனர்.

வழக்கமாக அப்பகுதியில் செயல்படும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை குவித்து வைத்துள்ளனர்.

ஒரு வாரத்திற்கு மேலாகியும் அரசால் அரிகேரி நெல்கொள்முதல் நிலையம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

சுமார் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் அங்கு தேங்கியுள்ளன. கோடைக் காலத்தில் திடீரென மழை பெய்தால் இந்த நெல் குவியல்கள் அனைத்தும் வீணாகி விடும். இதனால் நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக தொடங்க வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

பொது முடக்கம் இருந்தாலும், சமூக இடைவெளியோடு வந்திருக்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

இதுதொடர்பாக நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அறிவிக்கும்பட்சத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்” என்று கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in