

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு முன்களப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (மே 16) நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை (தி.மலை), கதிர் ஆனந்த் (வேலூர்), எஸ்.பி. விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்துப் பேசியதாவது:
"திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கரோனா 2-வது அலை பரவல் காரணமாக, 6,164 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதில், 3,533 பேர் குணமடைந்துள்ளனர். 2,255 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 88 பேருக்கு நோய் தொற்று தீவிரமடைந்ததால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2021-ம் ஆண்டு மே 15-ம் தேதி வரை மொத்த பாதிப்பு 13,814 ஆகும். இதில், 11,345 பேர் குணமடைந்துள்ளனர். 214 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கரோனா மருத்துவ சிகிச்சையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் என, மொத்தம் 1,402 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா கண்காணிப்பு மையங்களில் 3,020 படுக்கைகள் உள்ளன. தகுதியுள்ள 56 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 18,500 பேருக்கு 2 தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரோனா விதிமுறைகளை மீறிய 16,616 பேரிடம் இருந்து, 48 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் வசதி உள்ளது. ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது என்ற நோக்கத்துடன் மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்" என்றார்.
இதைதொடர்ந்து, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பில் நோய் தொற்று குறைவாகவே காணப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. கரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக உள்ளது. அனைத்து அரசு துறை அலுவலர்களும் கரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். அரசு அதிகாரிகள் நமக்காக தான் உழைக்கின்றனர் என்பதை மக்கள் உணர வேண்டும். நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நகர்ப்புறங்களை தொடர்ந்து கிராமப்பகுதிகளிலும் கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் என்னென்ன வசதிகள் வேண்டுமோ அதை செய்ய அரசு தயாராக உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்துக்கு விரைவில் மருத்துவக் கல்லூரி கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கும்.
அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க தேவையான புதிய கட்டமைப்பு வசதிகளை மருத்துவமனைகளில் ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதை அரசு விரைவில் நிறைவேற்றி தரும். கரோனா என்ற கொடிய நோய் தொற்றை ஒழிக்க அரசுடன் மக்களும் இணைந்து செயல்பட்டால் கடந்த ஆண்டைப்போல தற்போதும் கரோனாவை எளிதாக விரட்டியடிக்கலாம்" என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் காய்தரிசுப்பிரமணி, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில், மண்டல நகராட்சி நிர்வாகங்களின் இயக்குநர் விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.