நாள்தோறும் 300 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து வழங்குவதால் நேரு விளையாட்டு அரங்கம் அருகில் மக்கள் சாலை மறியல்

சென்னை நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை நேற்று தொடங்கியது. ஒரு நாளைக்கு 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து மருந்து கிடைக்காதவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். படம்: க.பரத்
சென்னை நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை நேற்று தொடங்கியது. ஒரு நாளைக்கு 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து மருந்து கிடைக்காதவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். படம்: க.பரத்
Updated on
1 min read

சென்னை நேரு விளையாட்டு அரங்கில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது. நாளொன்றுக்கு 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படுவதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. இம்மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்க தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கப்பட்டது.

பொதுமக்களின் கூட்டம் அதிகரித்ததால், சில தினங்களில் மருந்து விற்பனை அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. மேலும் மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி மாவட்டங்களிலும் மருந்து விற்பனை தொடங்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பொதுமக்களின் கூட்டம் குறையாததால், மருந்து விற்பனையை சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேற்று தொடங்கியது. நள்ளிரவு முதலே மருந்து வாங்க மக்கள் குவியத் தொடங்கினர். ஏற்கெனவே, முன்பதிவு செய்தவர்கள், புதிதாக வந்தவர்கள் என 2 வரிசைகளில் 500-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். 9 மணிக்கு 4 கவுன்ட்டர்களில் மருந்து விற்பனை தொடங்கியது. அப்போது மக்கள், ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு சமூக இடைவெளி இல்லாமல் மருந்து வாங்க உள்ளே சென்றனர்.

தினமும் 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் என்ற அறிவிப்பால் வரிசையில் காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், பெரியமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக மருந்து வாங்க வந்தவர்களிடம் கேட்டபோது, “ரெம்டெசிவிர் மருந்து உயிர்க்காக்கும் மருந்து இல்லை. இம்மருந்துக்காக அலைய வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்கிறார். பின்னர் எதற்கு மருத்துவர்கள் இந்த மருந்தை வாங்கி வருமாறு சொல்கின்றனர். அரசே ஏன் இந்த மருந்தை விற்பனை செய்ய வேண்டும். மருந்து விற்பனையை அரசு நிறுத்திவிட வேண்டும். அப்படிச் செய்தால் மருத்துவர்களும் மருந்தை வாங்கி வருமாறு சொல்ல மாட்டார்கள். எதற்காக இப்படி பொதுமக்களை கஷ்டப்படுத்துகிறீர்கள்.

மருந்து விற்பனையில் முறையான திட்டமிடல் இல்லை. மருந்து வாங்க வருபவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் நிலைதான் உள்ளது. பாதுகாப்பு பணியில் போலீஸார் மட்டுமே உள்ளனர். சுகாதாரத் துறை அதிகாரிகள் யாரும் இல்லை. குடிக்கத் தண்ணீர் வசதி கூட இல்லை” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in