

கரோனாவை விஞ்ஞானபூர்வமாக அணுகி இறப்பு விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரியில் இறப்பு விகிதம் கடுமையாக அதிகரித்து தேசிய அளவில் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு செய்தார்.
அதையடுத்து அதிகாரிகளிடம் ஆளுநர் தமிழிசை கூறுகையில், "மக்களிடம் இருந்துவரும் கோரிக்கைகளை உடன் கவனிக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்குத் தொலைபேசி மூலம் தேவையான மருத்துவ ஆலோசனை, ஆறுதல் போன்ற தார்மீக ஆதரவைத் தரவேண்டும். அவசர ஊர்தி உட்பட அனைத்து மருத்துவ வசதிகளும் உடன் பாதிக்கப்பட்டோருக்குக் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரியைச் சேர்ந்த நிதின் செல்வம், மோஹித் செல்வம் ஆகிய இரு சிறுவர்கள் தாங்கள் சேமித்து வைத்த ரூ.3000க்கும் மேலான தொகையை ஆளுநரிடம், கரோனா நிதியாக வழங்கினர். அச்சிறுவர்களை ஆளுநர் பாராட்டினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழிசை கூறுகையில், "80க்கும் மேற்பட்ட அவசர ஊர்திகள் செயல்படுகின்றன. படுக்கை வசதிகள் அதிகப்படுத்தப்படுகின்றன. தேவையான அளவு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. ஆக்சிஜன் தேவைகள் தொடர்பாக பணிகளைச் செய்ய அரசு செயலர் விக்ராந்த் ராஜாவுக்குக் கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது. தற்போது 5000 ரெம்டெசிவர் கையிருப்பில் உள்ளது. இன்னும் 5000 பெற உள்ளோம். கரோனாவை விஞ்ஞானபூர்வமாக அணுகி இறப்பு விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.