

திருப்பூர் மாவட்டத்திலும் ரெம்டெசிவர் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா சிகிச்சை முறைகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு குறித்து செய்தித் துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கரோனா படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ள திரவ தொட்டிகளை பார்வையிட்டார். கூடுதலாக தேவைப்படும் வசதிகள் குறித்து, ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து, திருப்பூர் ரயில் நிலையம் அருகே அண்ணா,பெரியார் மற்றும் குமரன் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கை, ஆக்சிஜன் பயன்பாடு மற்றும் தேவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள். கரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறவர்கள், மற்றும் மற்ற நோய்களால் பாதிக்கப்படுகிறவர்களை காப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மருத்துவத் துறை மூலமாக எடுக்கப்படும்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை, விரைவாக தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெம்டெசிவர் மருந்து வழங்கப் பட்டுள்ளது. இந்த பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தையும் இணைத்து, ரெம்டெசிவர் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் தொட்டி, விரைவில் பயன்பாட்டுக்கு வரும்" என்றார்.
பின்னர் அவிநாசி அரசு மருத்துவமனை, அவிநாசி தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கரோனா சிகிச்சை மையம், ஊத்துக்குளி அரசு மருத்துவமனை, காங்கயம் அரசு மருத்துவமனைகளிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ், வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, தாராபுரம் சார் ஆட்சியர் பவண்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.