

திருச்சியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என மருந்து வாங்க வரும் பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு இயன்முறை சிகிச்சைக் கல்லூரி வளாகத்தில் மே 8-ம் தேதி முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஞாயிறு விடுமுறை தவிர மற்ற நாட்களில் தினமும் 50 பேருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், தினமும் 200-க்கும் அதிகமானோர் மருந்து வாங்க வரும் நிலையில், 50 பேருக்கு மட்டுமே வழங்குவதால், மருந்து கிடைக்காதவர்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். மேலும், மருந்து வாங்க வருவோரில் பலர் முந்தைய நாள் மாலையே வந்து காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.
இந்தநிலையில், நேற்றும் 200-க்கும் அதிகமானோர் ரெம்டெசிவிர் மருந்து வாங்க காத்திருந்த நிலையில், 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப் பட்டது. இதனால், டோக்கன் கிடைக்காதவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரி டம் கடும் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும் போது, “ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை ஆன்-லைனில் முன்பதிவு செய்து வழங்க வேண் டும். இல்லையெனில், மருந்து வாங்க வரும் அனைவருக்கும், தேதி வாரியாக டோக்கன் கொடுத்து, அதன்படி மருந்தை விற்பனை செய்ய வேண்டும். இதனால், இங்கு வந்து பல மணி நேரம் காத்திருந்தும், மருந்து கிடைக்காமல் நாங்கள் ஏமாற்றம் அடைவதும், அலைக் கழிக்கப்படுவதும் தவிர்க்கப்படும். தினமும் 100 பேருக்கு ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “ரெம்டெசிவிர் மருந்து விற்பனை முறையை முறைப்படுத்துமாறு, இப்பணியை மேற்பார்வையிடும் வருவாய்த் துறையினரிடம் பலமுறை கூறியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மருந்து கிடைக்காதவர்கள் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
ரெம்டெசிவிர் மருந்து வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க மறப்பதால், கரோனா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.