

மே 21ம் தேதிக்குப் பிறகு கூடுதல் ரெம்டெசிவிர் தமிழகத்துக்குக் கிடைக்க வாய்ப்புள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் 4 பேர் உயிரிழந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவமனையை ஆய்வு செய்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, ''தமிழ்நாட்டுக்கு மொத்தமே 7000 ரெம்டெசிவிர் மருந்துகள்தான் வருகின்றன. ஆனால் தேவை 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. எல்லா மருத்துவர்களும் ரெம்டெசிவிர் மருந்தை எழுதித் தந்து விடுகிறார்கள் அதைக் காட்டிலும் தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனால்தான் கூட்டம்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், முதல்வர் கூட்டத்தைக் குறைக்க முடிவெடுத்தார்.
அதையடுத்து மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கோவை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விநியோகம் பிரித்துத் தரப்பட்டது. அங்கு ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
21ம் தேதிக்கு பிறகு ரெம்டெசிவிரைத் தயாரிக்கும் நிறுவனத்தில் கூடுதல் மருந்துகள் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடமும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடமும் தொடர்ந்து பேசிவருகிறார்.
கூடுதல் மருந்துகள் வரும் சூழலில், 6 மாவட்டங்களைத் தாண்டி பிற மாவட்டங்களுக்கும் மருந்தைப் பிரித்து தரும் சூழல் விரைவில் உருவாகும்'' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.