கரோனா தொற்றால் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு: ராணிப்பேட்டையில் சோகம்

கரோனா தொற்றால் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு: ராணிப்பேட்டையில் சோகம்
Updated on
1 min read

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமிரி காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி கரிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (48). இவர் திமிரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். 1994-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்தார். இவருக்கு சாமுண்டீஸ்வரி (43) என்ற மனைவியும், சுவேதா (20) என்ற மகளும், பூபதி (16) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், கரோனா 2-ம் அலை வேகமாகப் பரவி வந்ததைத் தொடர்ந்து ஆற்காடு, திமிரி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பஞ்சாட்சரம் கரோனா தடுப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே, கடந்த வாரம் காய்ச்சலால் அவர் அவதிப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு திடீரென அவரது உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதில், சிகிச்சை பலனின்றி பஞ்சாட்சரம் இன்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னதாக அவரது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பஞ்சாட்சரம் மகன் பூபதிக்கு கரோனா நேற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சுவேதா, சாமுண்டீஸ்வரியின் முடிவு வெளியாகவில்லை, இருப்பினும் அவர்கள் 2 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in