

*
திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயில்குப்பம் அருகே 2003-ம் ஆண்டு இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேருக்கு திருவள்ளூர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
2003 பிப்ரவரி 1-ம் தேதி, அரண் வாயில்குப்பம் கிராமத்தில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் அவமதித்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அருகே உள்ள திரூர் கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இதில், பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. பல்வேறு பொருட்களும், பொதுச் சொத்துகளும் சேதமடைந்தன. இந்த கலவரத்தில் மகேஷ் (25), சுகுமார் (19) ஆகியோர் உயிரிழந் தனர்.
இதுகுறித்து விசாரணை நடத் திய செவ்வாப்பேட்டை போலீ ஸார் 28 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசா ரணை திருவள்ளூர் மாவட்ட முதலா வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே குற்றம்சாட்டப்பட்ட 28 பேரில் கண்ணன் என்பவர் இறந்துவிட்டார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் அனைவரும் ஆஜ ராகாததால், 2 முறை தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று 17 பேர் ஆஜ ராயினர். இதையடுத்து, நீதிபதி வெற்றிச்செல்வி தீர்ப்பு வழங்கி னார். இதில், அனைவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட் டதாக நீதிபதி அறிவித்தார்.
இரட்டை கொலை குற்றத்துக் காக அனைவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், பல்வேறு பிரிவுகளின் கீழ் அனைவருக்கும் தலா 13 ஆண்டுகள் ஒரு மாதமும் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அனைவருக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.27.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆஜராகாத 10 பேருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் சவுந்திரராஜன் ஆஜரானார்.
தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் இளைஞர்கள் என்ப தால் அவர்களது மனைவிகளும், குழந்தைகளும் நீதிமன்றத்தில் குழுமியிருந்தனர். தீர்ப்பை கேட்டு அனைவரும் கதறி அழுதனர்.
10 பேருக்கு பிடிவாரன்ட்
தண்டனை பெற்றவர்களில், ஜீவா என்கிற ஜீவரத்தினம், மணிமாறன், உருத்திரகுமார், அன்பழகன், வேலாயுதம், சேட்டு என்கிற இளங்கோ, அன்பு, பாஸ்கர், பாலசங்கர், சரவணன், விமல்ராஜ், அன்பரசு, குமார், அறிவன், முனுசாமி, நாகராஜ், திருநாவுக்கரசு ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
ஐயப்பன் என்கிற பால்ராஜ், ஆட்டோ ராஜ், ரஜினி என்கிற பார்த்திபன், நாகராஜ், காளிதாஸ், பிரகாஷ், பாலமகேந்திரன், வெங்கடேசன், பிரேம்குமார், டில்லி ஆகியோருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது