புதுச்சேரியில் தீவிரமடையும் கரோனா; 2000-ஐக் கடந்த ஒருநாள் தொற்று

புதுச்சேரியில் தீவிரமடையும் கரோனா; 2000-ஐக் கடந்த ஒருநாள் தொற்று
Updated on
1 min read

புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக கரோனா தொற்று பாதிப்பு 2000-ஐக் கடந்துள்ள நிலையில், மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கையும் ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இதுதொடர்பாகப் புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (மே.11) வெளியிட்டுள்ள தகவல்:

’’புதுச்சேரி மாநிலத்தில் 9,058 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 1,590 பேருக்கும், காரைக்காலில் 285 பேருக்கும், ஏனாமில் 125 பேருக்கும், மாஹேவில் 49 பேருக்கும் என மொத்தம் 2,049 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 21 பேர், காரைக்காலில் 6 பேர், ஏனாமில் 3 பேர் என 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,018 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.36 ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 75 ஆயிரத்து 24 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மருத்துவமனைகளில் 2,072 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 12,757 பேரும் என மொத்தமாக 14,829 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 1,359 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 177 (78.88 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 8 லட்சத்து 71 ஆயிரத்து 273 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 7 லட்சத்து 84 ஆயிரத்து 226 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 622 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’.

இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in