புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு: ஏப்.1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்துறை தகவல்

புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு: ஏப்.1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்துறை தகவல்
Updated on
1 min read

புதுச்சேரியில் 2021-22ஆம் ஆண்டுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த மின் கட்டண உயர்வு கடந்த ஏப்.1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகப் புதுச்சேரி மின்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

" ‘கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 2021-22ஆம் ஆண்டிற்கான மின் கட்டண நிர்ணய ஆணையைக் கடந்த ஏப்.7ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, 2021-22ஆம் ஆண்டிற்கான புதிய மின் கட்டணங்கள் கடந்த ஏப்.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

வீட்டுப் பயன்பாட்டுக்குக் குறைந்தபட்சம் யூனிட்டுக்கு 5 பைசாவும், அதிகபட்சமாக 30 பைசாவும், வர்த்தகப் பயன்பாட்டுக் கட்டணம் 10 பைசாவும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகத்தில் 100 யூனிட் வரை ரூ.1.50இல் இருந்து ரூ.1.55 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை ரூ. 2.55இல் இருந்து ரூ.2.60 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.4.50இல் இருந்து ரூ.4.65 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட் ரூ.5.90இல் இருந்து ரூ.6.05 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், முதல் 100 யூனிட் பயன்படுத்துவோருக்கு நிரந்தரக் கட்டணமாக ரூ.40, அதற்கு மேல் பயன்படுத்துவோருக்கு நிரந்தரக் கட்டணமாக ரூ.45 என பழைய நிரந்தரக் கட்டணமே நிர்ணயிக்கப்பட்டள்ளது.

வரத்தகப் பயன்பாட்டில் 100 யூனிட் வரை ரூ.5.60இல் இருந்து ரூ.5.70 ஆகவும், 101 முதல் 250 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.6.65இல் இருந்து ரூ.6.75 ஆகவும், 250 யூனிட்டுக்கு மேல் ரூ.7.40ல் இருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நிலை கட்டணம் மற்றும் மின் உபயோகக் கட்டணம் மீதான கூடுதல் வரி 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.’’

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in