

எதிர்க்கட்சித் தலைவர் தேர்வில் இழுபறி நீடித்து வரும் பரபரப்பான சூழலில், சென்னையில் மீண்டும் இன்று (மே 10) அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை கொண்டுவர ஒருதரப்பும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியை கொண்டுவர மற்றொரு தரப்பும் விரும்புகின்றனர். இதில், இருதரப்புமே விட்டுத்தர மறுப்பதால், எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நிலவுகிறது.
இதற்கிடையே, எதிர்க்கட்சித் தலைவர் தேர்வுக்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாததால், எம்எல்ஏக்கள் கூட்டம்மே 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்தது.
அதன்படி, சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்குகூட்டம் நடைபெறுகிறது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் ஒருமித்த கருத்துடன் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் தற்போது சட்டப்பேரவை உறுப்பினராகியுள்ளதால், எந்தப் பதவியை விட்டுக்கொடுப்பது என்பது குறித்தும் இதில் முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.