படம் விளக்கம் : 

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள எலைட் மது விற்பனைக் கடையில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை இன்று வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள். படம் : ஜெ.மனோகரன்.
படம் விளக்கம் :  கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள எலைட் மது விற்பனைக் கடையில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை இன்று வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள். படம் : ஜெ.மனோகரன்.

தமிழக அரசின் முழு ஊரடங்கு அறிவிப்பு: கோவையில் டாஸ்மாக் கடைகளில் திரண்ட மதுப்பிரியர்கள்

Published on

தமிழக அரசின் முழு ஊரடங்கு அறிவிப்பால், கோவையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள், எலைட் மது விற்பனைக் கடைகளில் ம்துப்பிரியர்கள் இன்று (மே-08) நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருக்கும், திறக்கப்படாது எனவும் அரசு அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனுடன் இணைக்கப்பட்டு இருந்த மதுக்கூடங்கள், சில வாரங்களுக்கு முன்னரே, மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இந்த ஊரடங்கு காலத்தில் கடந்த சில நாட்களாக காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதால், இன்று மற்றும் நாளை(9-ம் தேதி) மட்டும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றமடைந்த மதுப்பிரியர்கள்

கடந்தாண்டு கரோனா தொற்று பரவத் தொடங்கிய போது, தமிழக அரசு முதலில் மார்ச் இறுதி வாரத்தில் மட்டும் முழு ஊரடங்கு அறிவித்தது. எப்படியும் ஏப்ரல் மாதம் ஊரடங்கு முடிந்து விடும் என மதுப்பிரியர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்திருந்தனர். ஆனால், அதன் பின்னர், மத்திய அரசு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 15-ம் தேதி முதல்கட்ட முழு ஊரடங்கு பிறப்பித்தது.

அதைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மதுக்கடைகள் திறக்கப்படாததால், மதுகுடித்து பழக்கமான வாடிக்கையாளர்கள் மதுபாட்டில்கள் விற்கப்படும் இடங்களைத் தேடி அலைந்ததும், சிலர் வீடுகளிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சத் தொடங்கிய நிகழ்வுகளும் நடந்தன.

உஷாரான மதுப்பிரியர்கள்

தற்போது, இரண்டாவது முறையாக முழு ஊரங்கு குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த முறை போல், இந்த முறை கோட்டை விட்டு விடாமல் இருக்க, டாஸ்மாக் மதுக்கடைகள் முன்பு இன்று காலை முதலே மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

சிலர் பைகளைக் கொண்டு வந்து அதிக பாட்டில்களை வாங்கிச் சென்றனர். அதேபோல், மதுபாட்டில்கள் முழுக் கொள்ளளவு விற்கப்படும் எலைட் மது விற்பனைக் கடைகளில் இன்று வரிசையில் நின்று மதுபாட்டில்களை பெட்டி, பெட்டியாக வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றனர்.

சில டாஸ்மாக் கடைகளில் மாலை நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், ஊழியர்கள் சிரமப்பட்டனர். நாளையும் வாடிக்கையாளர்கள் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், விற்பனைக்காக மதுபாட்டில்களை போதிய அளவில் இருப்பு வைக்க டாஸ்மாக் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in