

மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டி வரும் என, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பிரதமர் மோடி, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அண்ண யோஜனா திட்டத்தின்கீழ், மே மற்றும் ஜூன் ஆகிய 2 மாதங்களுக்கு மாதங்களுக்கு தலா 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு (சிவப்பு ரேஷன் கார்டு அட்டைதாரர்கள்) இலவச அரிசி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் இரண்டு மாதங்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைவர்.
இந்நிலையில், கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று (மே 08) நடைபெற்றது. இதில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று இலவச அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கே.பி.எஸ்.ரமேஷ் எம்எல்ஏ, குடிமை பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறைச் செயலாளர் உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதன் பின்னர், ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கரோனா காலத்தில் மக்கள் தங்களது வருமானத்தை இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு இலவச அரசி வழங்கும் மத்திய அரசு, பிரதமர் மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுமக்கள் கரோனா எச்சரிக்கை நடவடிக்கைகளை தயவு செய்து கடைப்பிடிக்க வேண்டும். என்னுடைய காரை பார்த்தவுடன் முகக்கவசம் அணிகிறார்கள். என்னைப் பார்த்து முகக்கவசம் போட வேண்டாம். கரோனாவுக்காக முகக்கவசம் அணியுங்கள்.
கரோனாவைக் கட்டுப்படுத்த தனி மனித ஒழுக்கம் மிக மிக அவசியம். சிலர் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் ஒட்டுமொத்த கடைகளையும் அடைக்க வேண்டியிருக்கிறது. பாமர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
மக்கள் கட்டுப்பாட்டோடு இருந்தால் கரோனா கட்டுப்படும். முன்பிருந்த கரோனாவால் முதியோர்தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். தற்போது 30 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களை கரோனா மிக அதிகமாக தாக்குகிறது.
கரோனா நடவடிக்கைகள் பற்றி முதல்வரிடம் விவாதித்துள்ளேன். மக்கள் நலன் வேண்டி இணக்கமான முறையில் எங்களுடைய செயல்பாடு இருக்கும். புதுச்சேரியில் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிடமிருந்து சில உதவிகளை கேட்டோம். பிபிஇ கிட், பல்ஸ் ஆக்சி மீட்டர், ஆக்சிஜனேட்டர், என்-95 முகக்கவசம், ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அவை ஓரிரு நாட்களில் கிடைக்கும்.
புதுச்சேரி மக்கள் மீது அக்கறையோடு செயலாற்றிக்கொண்டிருக்கிறோம். கரோனா தொற்று அதிகரித்த உடனே எல்லாவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறோம். மக்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இதை செய்தால் கரோனா பரவாமல் தடுக்கலாம்.
ஆனால், மக்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் இருப்பதால் ஊரடங்கு அறிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். முதலில் ஊரடங்கு வேண்டாம் என்றார்கள். இப்போது ஊரடங்கு போட்டால்தான் நான் அடங்குவேன் என்றால் எப்படி?
ஒரு நிமிடத்தில் அரசு முழு ஊரடங்கு போட்டுவிடும். அரசுக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது. அதன்பிறகு, மக்களுடைய வாழ்வாதாரம் தான் பாதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தயவு செய்து எச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் போடுவதன் மூலம் 90 சதவீதம் நோய் பரவாமல் தடுக்க முடியும். இதையும் மீறி, மக்கள் தனி மனித எச்சரிக்கையோடு இல்லையென்றால் பிறகு முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டிய கட்டாயம் வரும்.
கரோனா உயிரிழப்புக்கான காரணம் குறித்து தினமும் அலசி ஆராயப்படுகிறது. இதில், ஒன்று வயதானவர்கள். மற்றொரு காரணம் தொற்றால் பாதிக்கப்பட்டவர் கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு வருவது. எனவே, மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
இனிமேல் உயிரிழப்பை தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். மக்கள் கட்டுப்பாட்டோடு இல்லை என்றால் கரோனாவை கட்டுப்படுத்த முடியாது. அரசு மட்டுமே இந்த கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என்று மக்கள் நினைப்பது தவறு. நாம் சுயக்கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். இல்லையென்றால் அரசு முழு கட்டுப்பாடு அறிவிக்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.
மேலும், புதிய அரசு மூலம் மக்களுக்கான நல்ல திட்டங்கள் வருவதற்காக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ, அதற்கு ஆளுநர் என்ற முறையில் நான் உதவிகரமாக இருப்பேன்".
இவ்வாறு துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.